ஜாக்டோ–ஜியோவின் காலவரையற்ற போராட்டத்தில் பங்கேற்போம் நீதித்துறை ஊழியர்கள் சங்க கூட்டத்தில் முடிவு
ஜாக்டோ–ஜியோவின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்பது என்று தமிழ்நாடு நீதித்துறை ஊழியர்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஈரோடு
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள்–ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ–ஜியோ அமைப்பு சார்பில் கடந்த 7–ந் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட்டது. அன்றைய தினம் தாலுகா அலுவலகங்கள் முன்பு மறியலில் ஈடுபட்ட அவர்கள் கைது செய்யப்பட்டனர். 8–ந் தேதி அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் சென்னையில் நடந்த ஜாக்டோ–ஜியோ அமைப்பின் கூட்டத்தில், இன்று (திங்கட்கிழமை) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டது.
போராட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் ஈரோடு சம்பத்நகரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாநில தலைவர் கருணாகரன் தலைமை தாங்கினார். ஈரோடு மாவட்ட தலைவர் மணிகண்டன், செயலாளர் பிரகாஷ், பொருளாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் செந்தில்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். இதில் ஜாக்டோ–ஜியோ நடத்தும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்பது என்று முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து மாநில பொதுச்செயலாளர் செந்தில்குமார் கூறும்போது, ‘‘ஜாக்டோ–ஜியோ அமைப்பு சார்பில் நடக்கும் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்பது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாடு முழுவதும் நீதித்துறையில் 12 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இதில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்பார்கள். மேலும், ஜாக்டோ–ஜியோ அமைப்பு நடத்த உள்ள ஆர்ப்பாட்டம், மறியல், காத்திருப்பு போராட்டம் ஆகியவற்றிலும் எங்களுடைய சங்கத்தினர் கலந்துகொள்வார்கள்’’ என்றார்.
கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் விஜயரகுநாதன் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நீதித்துறை ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.