தோல்விகளில் இருந்து உருவான வெற்றி

“தோல்விகள்தான் வெற்றிக்கான பாடங் களை கற்றுத்தருகின்றன. தோல்விகளை கண்டு துவளாமல் தொடர்ந்து முயற்சித்தால் வெற்றிகளை எட்டிப்பிடித்துவிட முடியும்” என்பது அனுவின் வாழ்க்கை அனுபவம்!

Update: 2017-09-10 07:28 GMT
“தோல்விகள்தான் வெற்றிக்கான பாடங் களை கற்றுத்தருகின்றன. தோல்விகளை கண்டு துவளாமல் தொடர்ந்து முயற்சித்தால் வெற்றிகளை எட்டிப்பிடித்துவிட முடியும்” என்பது அனுவின் வாழ்க்கை அனுபவம்!

சிறுவயதிலேயே தாயை இழந்த இவர், தந்தைக்கு தெரியாமல் சென்னையில் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு படித்து, பல்வேறு தோல்விகளுக்கு மத்தியில் ஐ.ஏ.எஸ். தேர்வில் வென்று, அதையே தனது அன்புத்தந்தைக்கு பரிசாக வழங்கியிருக்கிறார்.

அனு தோல்வியில் இருந்து வெற்றியை நோக்கி பயணித்த தனது வாழ்க்கை கதையை சொல் கிறார்:

“என் தாயார் பெயர் சீதாலட்சுமி. எனது ஆறாவது வயதிலே அவர் இறந்துபோனார். கதை சொல்லி என்னை தூங்கவைத்தது, பிடித்த உணவுகளை செய்து தருவது, தலைவாரி பள்ளிக்கு அனுப்பிவைத்தது எல்லாம் அம்மாதான். சிறு வயதிலே அம்மாவை இழந்தது எனக்கு பேரிழப்பு. அதன் பிறகு அப்பா முரளிதரன்தான் எனக்கு எல்லாமுமாய் இருந்தார். எனக்காகவே அவர் வாழ்ந்துகொண்டிருக்கிறார். அப்பா வசித்த வீடும், தங்கிப்படித்த பள்ளியும்தான் சிறுவயதில் என் உலகமாக இருந்தது.

அம்மா இல்லாதது என்னை அவ்வப்போது பாதிக்கும். ஆனால் என்னோடு தங்கிப்படித்த மூத்த மாணவிகள் என் முகம் வாடாமல் பார்த்துக்கொண்டார்கள். அவர்கள் என் மீது பாசத்தை பொழிந்தார்கள்.

நான் நன்றாக படித்து பெயரும், புகழும் பெறவேண்டும் என்று அப்பா ஆசைப்பட்டார். பள்ளி இறுதிக்கல்வி தேர்வில் நிறைய மதிப்பெண் பேறவேண்டும் என்று அப்பா விருப்பப்பட்டார். நானும் கடின முயற்சியுடன் படித்தேன். ஆனாலும் அவரது விருப்பத்தை என்னால் நிறைவேற்ற முடியவில்லை. பின்பு மிகுந்த எதிர்பார்ப்போடு எழுதிய மருத்துவ நுழைவுத் தேர்விலும் தோல்வியடைந்தேன். அடுத்து கால்நடை மருத்துவ கல்விக்கான நுழைவுத்தேர்வு எழுதி, ஜெயித்து அதனை படித்து, மூன்றாம் இடத்தை பிடித்து அப்பாவை ஓரளவு மகிழ்ச்சியடையச் செய்தேன்.

அப்போதெல்லாம் என் தந்தை அடிக்கடி, ‘அதிகாரமிக்க பதவிகளில் பெண்கள் இருந்தால்தான், அவர்களுக்கு சமூகத்தில் உரிய முன்னுரிமை கிடைக்கும்’ என்று சொல்வார். அப்போது எனக்குள் ‘ஐ.ஏ.எஸ்’ கனவு உதித்தது. ஆனால் அந்த பயிற்சிக்கு என் தந்தையிடம் பணம் கேட்க என் மனம் ஒப்பவில்லை. எனக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கும் அவரை மேலும் கஷ்டப்படுத்தவிரும்பவில்லை. அப்பாவிடம் பணத்தை வாங்கிப்படித்து, அதிலும் தோல்வியடைந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயமும் எனக்குள் இருந்தது.

நான் படித்த கல்லூரியிலே மூன்று மாதங்கள் ‘ரிசர்ச் அசிஸ்டென்ட்’ வேலை பார்த்தேன். அதில் கிடைத்த பணத்தைகொண்டு சென்னையில் உள்ள ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் ஒன்றில் சேர்ந்தேன். என் தந்தையிடம் உண்மையை சொல்லவில்லை. மேற்படிப்பிற்காக சென்னைக்கு செல்கிறேன் என்று கூறிவிட்டு கிளம்பினேன். வெற்றி யடைந்தால் இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம் என்று நினைத்தேன்” என்று கூறும் அனு, கேரளாவை சேர்ந்தவர். கொல்லத்தில் வசித்து வந்தார்.

“சென்னை வந்தடைந்தேன். அப்போது பயிற்சி மையத்திற்கு கொடுக்கும் அளவுக்கே என்னிடம் பணம் இருந்தது. அன்றாட செலவுக்குகூட கையில் பணம் இல்லாமல் தவித்தேன். உடன் படித்துக்கொண்டிருந்த டாக்டர் வித்யாவும், அமல் முரளியும் உதவினார்கள். புத்தகங்கள் வாங்க பணம் இல்லாத நிலை ஏற்பட்டபோது என்னுடன் தங்கியிருந்த ராகவி அவளது புத்தகங்களை எனக்கும் படிக்க தந்தாள். போட்டிப்போட்டு படிக்கும் இன்றைய காலகட்டத்தில் தோழியே தன் புத்தகங்களை தருவது என்பது மிக அரிதான விஷயம். எட்டு மாதங்கள் சென்னையில் பயிற்சிக்காக தங்கியிருந்தேன்.

2015-ல் ஐ.ஏ.எஸ். முதல் நிலை தேர்வு எழுதினேன். தோல்வியடைந்தேன். அந்த காலகட்டத்தில் எழுதிய வங்கி தேர்வுகளிலும்கூட தோல்வியைதான் சந்தித்தேன். தோல்வியோடு மனம் தளர்ந்து போய் சொந்த ஊரான கொல்லத்திற்கு சென்றேன். எனது தந்தையை பார்த்ததும் கட்டிப்பிடித்துக்கொண்டு அழுதேன். அவருக்கு காரணம் புரியவில்லை. அவர் ஏன் என்று கேட்டதற்கு, வங்கி தேர்வில் தோல்வியடைந்துவிட்டேன் என்றேன். அவர், ‘கால்நடை டாக்டரான நீ வங்கி தேர்வு பற்றி ஏன் கவலைப்படுகிறாய்?’ என்று கூறி என்னை தேற்றினார். இந்த நிலையில் தேசிய நுழைத்தேர்வு மூலம் கால்நடை மருத்துவ மேற்படிப்பிற்கான வாய்ப்பு கிடைத்தது. அதற்காக பரோலியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரிக்கு சென்றேன்.

முதல் செமஸ்டரை முடித்துவிட்டு, லீவு நாட்களில் ஊருக்கு வந்துவிட்டு திரும்பும் வழியில் மீண்டும் சென்னையில் உள்ள ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்திற்கு சென்றேன். அப்போதுதான் விருப்பப்பாடத்தில் கால்நடை மருத்துவத்திற்கு பதில் மனோதத்துவத்தை சேர்த்தேன். மீண்டும் ஐ.ஏ.எஸ். லட்சியத்தோடு படிக்கத் தொடங்கினேன். அதோடு கால்நடை மருத்துவ படிப்பிற்கான ‘அசைன்மென்ட்’ தயார் செய்யும் வேலைகளிலும் ஈடுபட்டேன். அப்போது ஐ.ஏ.எஸ். படிப்பை ஒரு பரீட்சார்த்த நிலையிலே வைத்திருந்தேன். அது கிடைக்காவிட்டாலும் வாழவேண்டும் அல்லவா!

கல்லூரியில் இருந்து அப்போது மாதந்தோறும் சிறிதளவு உதவித்தொகை கிடைத்துக்கொண்டிருந்தது. அது போதுமானதாக இருக்கவில்லை. அதனால் நிறைய பணக்கஷ்டத்தை அனுபவித்தேன். உடன் படிப்பவர்கள் சினிமாவிற்கும், விசேஷ நிகழ்ச்சிகளுக்கும் செல்லும்போது நான் விடுதியிலே தங்கிக்கொள்வேன். அப்போது சிவில் சர்வீஸ் பரீட்சையின் ‘ஆன்லைன் டெஸ்ட் சீரிஸ்’சில் பங்கெடுக்க ஆறாயிரம் ரூபாய் கொடுக்க ரொம்பவும் கஷ்டப்பட்டேன். மீண்டும் தேர்வு எழுதினேன்.

2016-ல் முதல் நிலை தேர்வு முடிவு வந்தபோது மகிழ்ச்சியடைந்தேன். முதல் கட்டத்தில் வெற்றியடைந் திருந்தேன். மெயின் தேர்வில் 700 மதிப்பெண் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ரிசல்ட் வந்தபோது 898 மதிப்பெண் பெற்றிருந்தேன். இன்டர்வியூவுக்காக நான் டெல்லிக்கு சென்றபோதும் அப்பாவிடம் எதுவும் சொல்லவில்லை. அதுவரை நான் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதியது அவருக்கு தெரியாது. கேரளாவில் இருந்து இன்டர்வியூவுக்கு செல்லும் மாணவர்களின் பயணசெலவு, தங்கும் இடம் போன்ற சவுகரியங்களை டெல்லியில் உள்ள கேரள ஹவுஸ் அரசு அதிகாரிகள் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் நான் விடுதியில் உள்ள விலாசத்தை கொடுத்திருந்ததால் எனக்கு அந்த சவுகரியங்கள் கிடைக்கவில்லை.

இன்டர்வியூ முடித்துவிட்டு பரோலி சென்றேன். அங்கிருந்து கேரளா திரும்புவதற்காக டெல்லிக்கு வந்தேன். அப்போது சென்னையில் உள்ள பயிற்சி மையத்தில் இருந்து போன் வந்தது. ஐ.ஏ.எஸ். தேர்வு முடிவு வந்துவிட்டதாகவும் எனக்கு 42-வது இடம் கிடைத்திருப்பதாகவும் சொன்னார்கள். என் கனவும், என் தந்தையின் கனவும் நனவான மகிழ்ச்சியில் திளைத்தேன். ஆனால் அந்த மகிழ்ச்சியை போனில் என் தந்தையிடம் சொல்ல விரும்பவில்லை. நேரடியாக சொல்லவேண்டும் என்று நினைத்து விமானம் ஏறினேன்.

அதிகாலையில் நான் வந்து இறங்கியபோது என் தந்தைக்கு தெரிந்துவிட்டது. கேரளாவில் எனக்கு நான்காவது இடம் கிடைத்திருக்கிறது என்றும், பத்திரிகைகளில் செய்தி வெளியாகிவிட்டது என்றும் மகிழ்ச்சியோடு சொன்னார். அந்த மகிழ்ச்சிதான் என் தந்தைக்கு நான் கொடுத்த வெற்றிப் பரிசு. சாதாரண மக்களுக்கு சேவை செய்யும் சிறந்த அதிகாரியாக வேண்டும் என்பதுதான் என் ஆசை” என்கிறார், அனு.

மேலும் செய்திகள்