செய்தி தரும் சேதி - வயோதிகத்திலும் வசந்தம்

மனிதனுக்கு எப்போதும் இளமையாகவே இருக்க வேண்டும் என்கிற தணியாத, அதே நேரத்தில் நிகழ வாய்ப்பில்லாத வேட்கை.

Update: 2017-09-10 06:26 GMT
னிதனுக்கு எப்போதும் இளமையாகவே இருக்க வேண்டும் என்கிற தணியாத, அதே நேரத்தில் நிகழ வாய்ப்பில்லாத வேட்கை.

யயாதியைப்போல வாய்ப்புக் கிடைத்தால் இளமையில் இருக்க வரம் கேட்க பலரும் ஆயத்தமாகவே இருக்கிறார்கள். அவர்கள் வயோதிகத்தை வாங்கிக்கொள்ள புருபோல மகன் கிடைக்காததே பிரச்சினை.

ஷேக்ஸ்பியர் வயோதிகத்தை ‘இரண்டாம் குழந்தைப் பருவம்’ என்று குறிப்பிடுகிறார். முதல் குழந்தைப் பருவத்தில் நான்கு கால்கள். இரண்டாவதில் மூன்று கால்கள்.

குழந்தைகள் அனைவரும் தங்களைக் கவனிக்க வேண்டும் என்று விரும்புவதைப்போல வயதானவர்களுக்கும் அத்தகைய கவன ஈர்ப்பு அறிகுறி உண்டு. இரண்டும் பற்களில்லாத பருவம். பாதுகாப்பின்மை உள்ள மனநிலை. குழந்தைகளைக் கையாளுவதைப்போலவே, பெரியவர்களையும் மூக்குக்கண்ணாடியைப்போல முன்ஜாக்கிரதையுடன் அணுக வேண்டும்.

‘உறவு என்பதே பிரிவின் தொடக்கம்’ என்றார் கண்ணதாசன். பிறப்பு என்பது இறப்பின் முன்னுரை. மரணத்தை நோக்கிய பயணமாகவே வாழ்க்கை நீள்கிறது. முதுமையை ‘நிமிஷக் கரையான் அரித்த ஏடு’ என்று கவிக்கோ அப்துல் ரகுமான் குறிப்பிடுகிறார். வாழ்க்கையை ஒவ்வொரு நிமிடமும் தன் பங்கில் அரித்தே வயோதிகம் வாய்க்கிறது.

வயோதிகத்தின் அளவு காலத்திற்குக் காலம் மாறுபடுகிறது. ஐம்பது வருடங்களுக்கு முன்பு ‘நாற்பது வயது பெரியவர்’ என்று இதழ்களில் எழுதுவார்கள். ‘அறுபது வயது முதியவர்’ என்று தள்ளாடுவதுபோல படம் வரைந்து காட்டுவார்கள்.

‘ஐம்பதிலும் ஆசை வரும்’ என்ற திரைப்படப் பாடல் ஒலித்தது. அப்போது அறுபதைக் ‘கண்டம்’ என்று அழைப்பார்கள். மணி விழாக்களுக்கு கைத்தடிகளைப் பரிசாக வழங்குவார்கள்.

இப்போது, எண்பது ஆனவர்களும் தங்களை ‘வயோதிகர்’ என்று அழைப்பது கிடையாது. தொண்ணூறு வயதானாலும் கண்ணுக்குத் தெரியாத கைத்தடிகளை வைத்திருக்கிறார்களே தவிர கைகளில் ஊன்றுகோல் இருப்பது இல்லை.

மகாத்மா காந்தி, ராஜாஜி ஆகியோரை கைத்தடி இல்லாமல் கற்பனை செய்வது கடினம். அதைப் பயன்படுத்தியதால் காந்தியின் கவர்ச்சி குறையவில்லை. அவரைப் பேட்டி காண வெளிநாட்டு இதழாளர்கள் வெகுநாட்கள் தவமிருந்தனர். இன்று பிம்பங்கள் பயன்களைக் காட்டிலும் பிரதானமாகி விட்டன.

ஒரு காலத்தில் ஐந்து வயதுக்குள் மரணம் சம்பவிக்காவிட்டால் எண்பது வரை வாழ்வது உறுதி. அதற்குப் பின்பும் திடீரென மரணம் நிகழாது. படிப்படியாக உறுப்புகள் தேய்ந்து, செயல்பாடு குறைந்து உடலைவிட்டு பிரக்ஞை நழுவும்.

தொற்றுநோய்களுக்குப் பலியானவர்கள் அன்று அதிகம். இன்று உடல்நலக் குறைபாடுகள் அதிகம். மாரடைப்பு, நீரிழிவு, புற்றுநோய், சிறுநீரக பாதிப்பு போன்றவற்றால் திடீரென ஆயுளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விடுகிறது. எந்த வயதிலும் அது வரலாம் என்பதே இன்றைய கவலை.

மனிதன் ஒரு கட்டம் வரை வளர்ந்து கொண்டேயிருக்கிறான். அதற்குப் பிறகு உடலை இயக்க தேவைப்படும் ஆற்றல் முக்கிய உறுப்புகளுக்கு மட்டுமே செல்கிறது. செல்களைப் புதுப்பிக்க இருக்கும் ஆற்றலை உபயோகிக்க முடியாது. அது இதயத்திற்கும், நுரையீரலுக்கும், கல்லீரலுக்கும் தேவைப்படும் சக்திக்காக மட்டுமே சிக்கனமாக இயங்க வேண்டும்.

எனவே செல்கள் சுருங்கி நெற்றியில் கோடுகள், முகத்தில் சுருக்கங்கள். பல் விழுந்தால் முளைப்பதற்கு ஆற்றலை உந்தித் தள்ளுவதில் சிக்கல். ஏற்கனவே வயதான காரணத்தால் கிடைக்கக்கூடிய ஆற்றலும் குறைந்துகொண்டே செல்லும். எதைப் பழுதுபார்ப்பது என்பதை, உயிர் நீடிக்கத் தேவையான உறுப்பைப் பொருத்து உடல் முடிவு செய்கிறது.

அழகுக்கான அவயங்கள் அப்போது ஆடம்பரமாகி விடுகின்றன. இயற்கை, போலி ஒப்பனைகளில் காலத்தைச் செலுத்த தயாராக இருக்கவில்லை. அதனால் நம் முகம் வயதைக் காட்டிவிடுகிறது.

வயதாவதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்பவர்கள் வசீகரத்துடன் வாழ்கிறார்கள். எரிச்சலுடன் இருப்பவர்கள் வருத்தத்துடன் தேய்கிறார்கள்.

அகிரோ குரோசவா இயக்கிய அற்புதமான படம் ‘கனவுகள்’. அதில் உள்ள உபகதை ‘தண்ணீராலை கிராமம்’ (கீணீ௴மீக்ஷீனீவீறீறீ vi-l-l-a-ge). செயற்கை சாதனங்களைப் பயன் படுத்தாமல் இயற்கையோடு இயைந்து வாழ்கிற அந்தக் கிராமத்தில் அனைவருக்குமே அதிக ஆயுள். யார் இறந்தாலும் பாட்டுப் பாடி, நடனமாடி, ஊர்வலம் சென்று கொண்டாடுவார்கள். வாழ்ந்து முடிந்தவர்களின் மரணம் கொண்டாட்டத்திற்குரியது.

நதானியல் ஹாத்ரோன் என்கிற அமெரிக்க எழுத்தாளரின் தனிமையைப் பற்றி பால் எல்மர்மோர் எழுதுகிறார். அதில் அவருடைய மூதாதையர் ஒருவர் எதிரியின் மண்டையோட்டை எச்சில் துப்புவதற்காக பயன்படுத்தியதாகக் குறிப்பிடுகிறார். ஒருவரோ தனிமைச் சூழலில் தூரத்தில் தெரியும் வாரிசுகளின் கல்லறைகளைப் பார்த்து வருத்தப்படுவதாக எழுதியிருப்பார். வரிசைக்கிரமமாக நடக்கும் மரணமே பெரிய பிராப்தம்.

வாழ்நாளின் கடைசி நொடி வரை இயங்கிய இமாலய மனிதர்கள் இருந்திருக்கிறார்கள். பெரியார் இறுதி வரை பகுத்தறிவு உரைகளை, உடல் உபாதைகளுக்கு நடுவே ஆற்றிய வண்ணம் இருந்தார்.

ஃபிடல் காஸ்ட்ரோ உடல் நலிந்த பின்பும் தேசத்திற்காக உழைப்பதை நிறுத்தவில்லை. அமெரிக்காவிற்கு அடிபணியாத நாடாக கியூபாவை உருவாக்குவதில் அவர் பங்கு அலாதியானது.

ஜே. கிருஷ்ணமூர்த்தி மூச்சிருக்கும் வரை கலகலப்பாக இயங்கியவர். அவரது கடைசி சொற்பொழிவு மரணத்தைப் பற்றியது.

மில்டன் அவருடைய மகத்தான படைப்புகளை விழிகள் மங்கிய பிறகே படைத்தார் என்று கவிஞர்களின் சரிதத்தை எழுதிய டாக்டர் ஜான்சன் குறிப்பிடுகிறார்.

பேராசிரியர் ஆ.சா. ஞானசம்மந்தன் விழிகள் பொய்த்த பிறகே இலக்கியத் திறனாய்வுகளை எழுதிக் குவித்தார். புலனொன்று பொய்க்கிறபோது வேறொன்றை சாணை தீட்டும் இயல்பு நமக்கு வந்துவிடுகிறது.

உடல் அதிசயமான இயந்திரம். இயங்க இயங்க நெகிழ்ந்து கொடுக்கும், ஓட ஓட விரைந்து செல்லும், நினைக்க நினைக்க வளைந்து கொடுக்கும். உழைப்பால் தேய்ந்தவர்கள் யாருமில்லை. உறுப்புகள் உழைக்காமலிருந்தால்தான் வற்றிப்போகின்றன. நடக்காமலிருந்தால் கால்கள் சூம்பும். மடக்காமலிருந்தால் கைகள் கூம்பும்.

விருப்பமான ஒன்றிலிருந்து வேறொன்றுக்குத் தாவுவதே ஓய்வு. ஓய்ந்திருப்பது வேறு, ஓய்வுடன் இருப்பது வேறு. பிடித்த பணியை ரசித்து ஆழ்ந்து அதில் கரைந்து போவதே ஓய்வு. உலகின் பல கண்டுபிடிப்புகள் அப்படி ஓய்வாக இருந்தவர்களால் உண்டானது.

சிலர் வாழ்நாளெல்லாம் உழைக்காமல் இருந்து விடுகிறார்கள். எதையேனும் காரணம் காட்டி உழைப்பதைத் தள்ளிப்போடுகிறவர்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள்.

உழைக்காமல் ஏமாற்றுபவர்களைக் கண்டித்து வேலை வாங்காமல், கடினமாய் உழைப்பவர்களுக்கே அதிகப் பணிகள் அளிக்கப்படுகின்றன.

வேலைக்குப் போகாமல் குடித்துவிட்டு வருகிற கணவனுக்கு கோழியடித்து குழம்பு வைக்கிற பத்தினிப் பெண்கள் இருக்கும் வரை அவர்கள் பட்டினி கிடக்க வாய்ப்பில்லை.

வயதாகும்போது மூளையின் திறன் சற்றுக் குறைந்துவிடுவது உண்மைதான். ஆனால் அதைத் தாண்டி சிலர் தெளிவாக இருப்பதைப் பார்க்கலாம். பெரியவர்களுக்குப் பயன்பாட்டு ஞாபகம் குறைந்த நேரமே இருக்கும் என்று ஆய்வகப் பரிசோதனைகள் அறிவிக்கின்றன. ஆனால் கருத்தாக்க நினைவாற்றல், சொற் பொருள் நினைவாற்றல் போன்றவற்றில் பிரச்சினை ஏற்படுவது இல்லை.

வயோதிகத்தில் மூளையின் சாம்பல் நிறப் பொருளின் அடர்த்தி குறைகிறது. ஒரு நொடிக்கு ஒரு நியூரான் மரணமடைகிறது. கார்ப்பஸ் கலோசத்தில் வெண்பொருளின் அளவு குறைகிறது. டோப்பமைன் சுரப்பு பாதிக்கப்படுகிறது. மூளையில் அமிலாய்டு படலம் படர்வதால் ‘அல்ஜைமர்’ போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

இசை, சொற்பொழிவு, எழுதுதல், விளையாட்டு போன்றவற்றில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு சுறுசுறுப்பாக இயங்குபவர்களுடைய மூளை இளைஞர்களைப்போல இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

நீலகிரியில் உள்ள தொலைதூர கிராமத்தில் 102 வயதான பெண்மணி ஒருவர் இந்த வயதிலும் துடிப்பாக இருக்கிறார். பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்கிறார்.

குன்னூருக்கு அருகிலிருக்கும் பகாசுரன் மலையில் இந்தக் கடை. பலரும் அடைவதற்கே சிரமமான இடம். அங்கு ஏழு குக்கிராமங்கள் தேவையான அவசரப்பொருட்களை அவரிடமிருந்தே வாங்க வேண்டும்.

அவர் பெயர் ரங்காத்தா, அறுபது ஆண்டுகளுக்கு முன்பு உதகை வந்தவர். முப்பது ஆண்டுகளுக்கு மேல் கடை நடத்துகிறார். அந்தக் கடை இல்லாவிட்டால் மக்கள் இன்னும் நான்கு கிலோ மீட்டர் நடக்க வேண்டும்.

அவருக்கு நான்கு மகன்கள். இருவர் அருகிலிருந்தாலும் அவர்களுக்குப் பாரமாக இருக்கக் கூடாது என சொந்த சம்பாத்தியத்தில் சுவாசிக்கிறார். ‘முடிந்த வரை உழைப்பேன்’ என்பதே அவரின் மூல மந்திரம். பார்வை கொஞ்சம் மங்கல். நடையில் சற்று தடுமாற்றம். ஆனால் செவிகள் கூர்மை. உழைப்போ கடினம். சில்லறையைச் சரியாக எண்ணிக் கொடுக்கும் துல்லியம். யாரிடம் பாக்கியிருக்கிறது என்கிற நினைவாற்றல். முதியோர் உதவித் தொகைக்குக்கூட விண்ணப்பிக்காத சூழல். இறுதி வரை உழைப்பவர்களுக்கு அவர் உதாரணம்.

இளமையிலேயே இலவசங்களுக்குக் கையேந்துபவர்களுக்கு முதுமையிலும் ரங்காத்தாவின் உழைப்பும், வாழ்வும் இச்செய்தி தரும் சேதி.

(செய்திகள் தொடரும்)

மேலும் செய்திகள்