காதி மற்றும் கைவினை பொருட்கள் கண்காட்சி
சிவமொக்காவில் காதி மற்றும் கைவினை பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. இதனை வருவாய்த்துறை மந்திரி காகோடு திம்மப்பா தொடங்கி வைத்தார்.
சிவமொக்கா,
சிவமொக்கா நகர் ஜெயில் சர்க்கிள் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் காதி மற்றும் கைவினை பொருட்கள் கண்காட்சியை நடந்தது. இந்த கண்காட்சியை மாவட்ட பொறுப்பு மந்திரியும், மாநில வருவாய் துறை மந்திரியுமான காகோடு திம்மப்பா தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:–
காதி துணிகள் நெய்யவும், கிராமப்புற பகுதிகளில் கைவினை பொருட்கள் தயாரிக்கும் வகையிலும் ரூ.100 கோடி செலவில் பயிற்சி மையம் அமைக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இது மாநில அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதைதொடர்ந்து காதி வாரிய தலைவர் யலவள்ளி ரமேஷ் பேசும்போது, ‘காதி பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுவதால் அவற்றின் விலை உயர்ந்துள்ளது. தேசிய கொடியை போல் காதியால் உற்பத்தி செய்யப்படும் பிற பொருட்களுக்கும் வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும். காதி பொருட்களின் விலை குறைந்தால் தான் அதனை மக்கள் வாங்குவார்கள். அதன் விற்பனை மேலும் அதிகரிக்கும். இதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்றார்.