வாஷி ரெயில் நிலையத்தில் தாயுடன் நின்ற 3 வயது சிறுவன் கடத்தல்

வாஷி ரெயில் நிலையத்தில் தாயுடன் நின்ற 3 வயது சிறுவனை கடத்தி சென்ற போதை ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2017-09-09 22:13 GMT

மும்பை,

நவிமும்பை வாஷி 31–வது செக்டர் பகுதியை சேர்ந்தவர் நான்ஷிண்டே. இவருக்கு 3 வயதில் ரகு என்ற மகன் இருக்கிறான். சம்பவத்தன்று சிறுவனின் தாய் அவனை அழைத்துக் கொண்டு வாஷி ரெயில் நிலையத்திற்கு வந்திருந்தார்.

அங்குள்ள சிற்றுண்டி கடையில் வடபாவ் வாங்குவதற்காக நின்று கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் வடபாவ் வாங்கி விட்டு பார்த்த போது அருகில் நின்ற மகன் ரகுவை காணவில்லை. இதனால் பதறி போன அவர் ரெயில் நிலையம் முழுவதும் தேடி அலைந்தார். ஆனால் சிறுவன் ரகுவை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து அவர் வாஷி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சியை பார்வையிட்டனர். அப்போது பிளாட்பாரத்தில் வந்த ஆசாமி ஒருவர் சிறுவனை நைசாக தூக்கி கொண்டு பன்வெல் செல்லும் ரெயிலில் ஏறி சென்ற காட்சி பதிவாகி இருந்தது.

அவர் போதை பழக்கத்திற்கு அடிமையானவர் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் கடத்தல் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த கடத்தல் ஆசாமியின் படத்தை மற்ற போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்தனர்.

மேலும் சிறுவனை கடத்தி சென்ற அந்த ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்