மக்கள் நீதிமன்றம் மூலம் 711 வழக்குகளுக்கு தீர்வு ரூ.10 கோடியே 91 லட்சம் பைசல்

சேலம் மாவட்டத்தில் நேற்று நடந்த மக்கள் நீதிமன்றம் மூலம் 711 வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ.10 கோடியே 91 லட்சம் பைசல் செய்யப்பட்டது.

Update: 2017-09-10 01:30 GMT

சேலம்,

சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள கோர்ட்டில் நேற்று மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற்றது. மாவட்ட முதன்மை நீதிபதி மோகன்ராஜ் மேற்பார்வையில் நடந்த இந்த சமரச தீர்வு மையத்தில் மொத்தம் 8 அமர்வுகளாக பிரித்து வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான ரவிச்சந்திரன், 3–வது கூடுதல் மாவட்ட நீதிபதி எழில், மோட்டார் வாகன விபத்துக்கான சிறப்பு மாவட்ட நீதிபதி பாலசுப்பிரமணியம் உள்பட நீதிபதிகள், ஓய்வு பெற்ற நீதிபதிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதில் காசோலை மோசடி, மோட்டார் வாகன விபத்து, குடும்பநல வழக்குகள், தொழிலாளர் நலன், சிவில் என மொத்தம் 4 ஆயிரத்து 211 வழக்குகள் சமரசத்திற்கு எடுத்து கொள்ளப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதுபோல ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய கோர்ட்டுகளிலும் மக்கள் நீதிமன்றம் நடந்தது.

சேலம், ஆத்தூர், மேட்டூர், ஓமலூர் மற்றும் சங்ககிரி ஆகிய கோர்ட்டுகளில் 4,211 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டதில் 711 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது. இதன்மூலம் ரூ.10 கோடியே 91 லட்சத்து 71 ஆயிரத்து 670–க்கு பைசல் செய்யப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு உடனடியாக தொகைக்கான காசோலைகள் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்