வருகிற 13–ந் தேதி நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வினை ரத்து செய்ய வலியுறுத்தி புதுவை தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் வருகிற 13–ந் தேதி நடைபெறும் என தி.மு.க. கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் தீர்மானத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

Update: 2017-09-09 23:00 GMT

புதுச்சேரி,

தி.மு.க. கூட்டணி கட்சிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு புதுச்சேரி தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கூட்டத்தில் புதுவை மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம், தி.மு.க. வடக்கு மாநில அமைப்பாளர் சிவக்குமார், முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசு, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் விஸ்வநாதன், தேசியக்குழு உறுப்பினர் நாரா.கலைநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் ராஜாங்கம், தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் பெருமாள், பிரதேசக்குழு உறுப்பினர் முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் தேவபொழிலன், திராவிட கழக மாநில தலைவர் வீரமணி, முன்னாள் எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நீட் தேர்வால் மருத்துவ படிப்புக்கான வாய்ப்பை இழந்து தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதா மறைவுக்கு இந்த கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

*முற்போக்கு எழுத்தாளரும், பத்திரிகையாளருமான கவுரி லங்கேஷ் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். பா.ஜனதா அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்தது முதல் முற்போக்கு சிந்தனையாளர்கள் படுகொலை செய்யப்பட்டு வருவது தொடர்கிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கொலை குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய கர்நாடக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

*மத்திய அரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிராகவும், மாநில உரிமைகளை பறித்தும், சாதாரண ஏழை, எளிய மற்றும் நடுத்தர வகுப்பு மாணவர்கள் உயர்கல்வி பயில இயலாத சூழலை ஏற்படுத்தி உள்ளது. எனவே நீட் தேர்வு முறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும், கல்வியை மத்திய பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டு வரக்கோரியும் வருகிற 13–ந் தேதி மத்திய அரசை வலியுறுத்தி புதுவை தபால் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது.

மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்