பயிர் காப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

தலைஞாயிறு அருகே பயிர் காப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-09-09 23:00 GMT
வாய்மேடு,

நாகை மாவட்டம் தலைஞாயிறை அடுத்த அருந்தவம்புலம் கிராமத்தில் பயிர் காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து திருவிடைமருதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு பன்னத்தெரு கிராம விவசாயிகள் நல சங்க தலைவர் வெங்கடாசலம், செயலாளர் வேணு.காளிதாசன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதுகுறித்து தகவலறிந்த வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பன்னத்தெரு, கூத்தங்குடி வருவாய் கிராமங்களில் 2016-17-ம் ஆண்டு பருவத்தில் சாகுபடி செய்த 850 விவசாயிகள் திருவிடைமருதூர் கூட்டுறவு வங்கி மூலம் பயிர் காப்பீடு செய்துள்ளனர். ஆனால் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகை இதுவரை வழங்கப்படவில்லை. எனவே வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகையை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ஒரு வார காலத்திற்குள் பயிர் காப்பீட்டு தொகை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு அவர்களிடம் கூறினார். இதையடுத்து விவசாயிகள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்