தமிழகத்தில் பாரதீய ஜனதா ஆட்சி விரைவில் அமையும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு

தமிழகத்தில் விரைவில் பாரதீய ஜனதா ஆட்சி விரைவில் அமையும் என்று மத்திய மந்திரி பொன்.ராதகிருஷ்ணன் கூறினார்.

Update: 2017-09-09 23:15 GMT
திருச்சி,

பாரதீய ஜனதா கட்சி சார்பில் நீர் தேர்வு விளக்க பொதுக்கூட்டம் நேற்று இரவு திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நடந்தது. இதற்கு திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் தங்க.ராஜைய்யன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

1,176 மதிப்பெண் பெற்ற அரியலூர் மாணவி அனிதா நீட் தேர்வில் மதிப்பெண் பெறாததற்கு காரணம் தி.மு.க. தான். அதாவது நீட் தேர்வு வராது என்று திராவிட முன்னேற்ற கழகம் பொய் சொல்லி இருக்கிறது. இதை நம்பி பிளஸ்-2 தேர்வு முடிந்து 2 மாதமாக மாணவி அனிதா நீட் தேர்வுக்கு தயார் ஆகவில்லை. இனால் தான் அவர் நீட் தேர்வில் மதிப்பெண் பெறவில்லை. மாணவி அனிதா தற்கொலைக்கு தூண்டப்பட்டு இருக்கிறார். அவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.

மாணவர்கள் களத்தில் இறங்கி போராட வேண்டும் என்று ஒரு கூட்டம் தவம் இருந்து கொண்டு இருக்கிறது. மாணவி அனிதா மரணம் குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும். இது பற்றி முதல்-அமைச்சர் உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன்.

திராவிட கழகங்களின் ஆட்சியில் தமிழகம் கல்வியில் தரை மட்டத்திற்கு போய் இருக்கிறது. தமிழகத்தில் 2 ஆயிரம் அரசு பள்ளிகள் மூடும் நிலை தற்போது ஏற்பட்டு உள்ளது. மத்திய அரசு நடத்தும் கேந்திரா வித்யாலயா பள்ளி போல் தமிழகத்தில் ஒரு கேந்திரா வித்யாலயா பள்ளி தொடங்கினால் பாராட்டலாம். தமிழகத்திற்கு கேந்திர வித்யாலயா பள்ளிக்கூடங்களை தொடங்கி ஆட்சியாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

நாளையே தேர்தல் வந்தாலும் கூட தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் தயாராக இருக்கிறார்கள். மு.க. ஸ்டாலின் கடந்த 3 ஆண்டுகளாக மத்திய அரசு என்ன செய்தது என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

மத்திய பாரதீய ஜனதா கட்சி கடந்த 3 ஆண்டு என்னென்ன திட்டங்கள் செய்து உள்ளது என்பதை கூறி விவாதம் நடத்த நான் தயாராக இருக்கிறேன். நீங்கள் (மு.க.ஸ்டாலின்) வாருங்கள்.

மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண விரைவில் இலங்கை அமைச்சருடன் பேச்சு வார்த்தை நடக்க உள்ளது. தமிழை உலக அரங்கில் கொண்டு செல்ல மோடி நடவடிக்கை எடுத்து வருகிறார். பாரதீய ஜனதா கட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவதை தமிழக அரசு தடை செய்ய வேண்டும். தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சி ஆளும் நிலை வெகு விரைவில் உள்ளது.

இவ்வாறு கூறினார்.

கூட்டத்தில் மாநில தலைவர் தமிழிரை சவுந்தர்ராஜன் பேசியதாவது:-

தற்போது அனிதா மரணத்தை வைத்து அரசியல் செய்து கொண்டு இருக்கிறார்கள். இலங்கையில் எத்தனை பேர் இறந்தார்கள் அப்போது என்ன செய்து கொண்டு இருந்தார் ஸ்டாலின். பாரதீய ஜனதா கட்சி தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தை அப்புறப்படுத்த வந்து இருக்கிறது. தற்போது ஊழல் இல்லாத ஆட்சியை மோடி நடத்தி வருகிறார்.

பாரதீய ஜனதா ஆட்சி வந்தால் தமிழ் ஆட்சி மொழியாக வரும் என்று துணிச்சலாக கூறுகிறேன். செப்டம்பர் மாதம் 20-ந்தேதிக்கு மேல் வழக்கில் தீர்ப்பு வருகிறது.

அப்போது திராவிட முன்னேற்ற கழகமா, தீகார் முன்னேற்ற கழகமா என்று பார்த்து விடுவோம். நீட் தேர்வு அமைதியாக நடந்து முடிந்த நிலையில் போராட்டம் நடத்தி கொண்டு இருக்கிறார்கள். இது தேவையற்ற போராட்டம்.

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.

மேலும் செய்திகள்