சென்னையில், 12-ந் தேதி நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம்

சென்னையில் வருகிற 12-ந் தேதி, நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.மணி கூறினார்.

Update: 2017-09-09 23:00 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. நவம்பர் 17-ந் தேதி விழுப்புரத்தில் நடைபெறும் மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது குறித்து நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பா.ம.க. மாநில தேர்தல் பணிக்குழு தலைவர் பு.த.அருள்மொழி தலைமை தாங்கினார். இதில் பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டு பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நவம்பர் 17-ந் தேதி தியாகிகள் தினத்தை முன்னிட்டு விழுப்புரத்தில் நடைபெறும் சமூக நீதி மாநாடு வித்தியாசமாக நடைபெறும். கண்டிப்பாக இந்த மாநாடு வெற்றி பெறும்.

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை அரசு நடத்துகிறது. பிறகு ஏன் நீட் தேர்வு வைக்க வேண்டும்?. நீட் தேர்வு ஏழை, நடுத்தர மாணவர்களை வடிகட்டுவதற்காக தான் நடத்தப்படுகிறது. இதனால் பா.ம.க. சார்பில் நீட் தேர்வை எதிர்த்து வருகிற 12-ந் தேதி சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

தற்போது பரவலாக மழை பெய்து கிருஷ்ணகிரி அணை மற்றும் கெலவரப்பள்ளி அணை நிரம்பி தண்ணீர் வீணாக செல்கிறது. அரசு நீர் மேம்பாட்டு திட்டங்களை முறையாக செயல்படுத்தி ஒரு சொட்டு தண்ணீர் கூட வீணாகாமல் சேமிக்க வேன்டும். மேலும் கிருஷ்ணகிரி படேதலாவ் கால்வாய் திட்டம், தர்மபுரி தும்பலஅள்ளி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்பு அ.தி.மு.க.வில் பல்வேறு குளறுபடிகளும், குழப்பமும் நிலவுகிறது. புதுச்சேரியில் இருந்து மைசூருக்கு எம்.எல்.ஏக்களை அழைத்து செல்வது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தும். இது குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும். தமிழக கவர்னர் இதை வேடிக்கை பார்க்கக்கூடாது, தக்க நடவடிக்கை எடுத்து நல்ல நிர்வாகத்தை கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் சுப.குமார், மாவட்ட செயலாளர்கள் அர்ஜூனன், ஆறுமுகம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மேகநாதன் மற்றும் ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்