9 நாட்களில் 1,000 பேருக்கு ஓட்டுனர்-பழகுனர் உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன

பெரம்பலூர் மாவட்டத்தில் 9 நாட்களில் 1,000 பேருக்கு ஓட்டுனர்-பழகுனர் உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று வட்டார போக்குவரத்து அதிகாரி அறிவழகன் தெரிவித்துள்ளார்.

Update: 2017-09-09 22:45 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் தண்ணீர் பந்தல் பகுதி யிலுள்ள வட்டார போக்கு வரத்து அலுவலகத்தில் ஓட்டுனர்-பழகுனர் உரிமம், ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல் மற்றும் நகல் ஓட்டுனர் உரிமம் வழங்குதல் ஆகிய பணிகள் அரசு உத்தரவுப்படி நேற்று நடந்தன.

இதையொட்டி பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்து புதிதாக ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு முன்னோட்டமாக பழகுனர் உரிமத்துக்கு விண்ணப்பித்தனர். அப்போது விண்ணப்பதாரர்களின் ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட சான்றிதழை சரிபார்க் கும் பணி வட்டார போக்கு வரத்து அதிகாரி அறிவழகன், மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

சாலைவிதிகளை பற்றிய தேர்வு

பின்னர் விண்ணப்பதாரர்களுக்கு புகைப்படம் எடுக்கப்பட்டு கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டது. ஏதாவது ஒரு வாகனத்திற்கு மட்டும் பழகுனர் உரிமம் பெற ரூ.230-ம், இருசக்கர வாகனம் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங் களுக்கு சேர்த்து பழகுனர் உரிமம் பெற ரூ.380-ம் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. பின்னர் சாலை விதிகளை பின்பற்றுவது குறித்து கணினியில் விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு வைக்கப்பட்டது. அதன் பிறகு இறுதியில் பழகுனர் உரிமம் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்டது. ஓட்டுனர் உரிமம் பெறும் முனைப்புடன் பலர் பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் குவிந்ததால் வழக்கத்தை விட கூட்டம் சற்று அதிகமாக இருந்தது.

1,000 பேருக்கு...

இது தொடர்பாக பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அதிகாரி அறிவழகன் நிருபர் களிடம் கூறுகையில், வழக்கமாக ஒருநாளைக்கு 30 முதல் 40 நபர்களே ஓட்டுனர்- பழகுனர் உரிமம் பெற வருவார்கள். ஆனால் அசல் ஓட்டுனர் உரிமத்தை வாகன ஓட்டிகள் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவால் தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் பழகுனர் உரிமத்திற்கு விண்ணப்பித்து அதனை பெற்று செல்கின்றனர். 6 மாதம் வரை இந்த பழகுனர் உரிமத்தை வைத்து வாகனம் ஓட்டலாம். அதன் பிறகு அது செல்லாமல் போய்விடும். எனவே வாகன ஓட்டிகள் ஒரு மாதம் கழித்த பின்னர் மீண்டும் வந்து வாகனங்களை எங்கள் முன்பு ஓட்டி காண்பித்து புதிய ஓட்டுனர் உரிமத்தை பெற்று கொள்ள வேண்டும். கடந்த 1-ந்தேதியிலிருந்து 9-ந்தேதி வரை 9 நாட்களில் 1,000 பேர் ஓட்டுனர்-பழகுனர் உரிமங்கள் பெற்று சென் றிருக்கின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் சாலை விதிகளை பின்பற்றி மிதவேகமாக வாகனங்களை இயக்க வேண்டும். குடிபோதையில் வாகனம் ஓட்ட கூடாது. உயிரிழந்துவிட்டால் அதனை திரும்ப பெற முடியாது என்பதை நினைவில் கொண்டும், உயிரிழப்பால் குடும்பத்திற்கு ஏற்படும் வலிகளை நினைவில் கொண்டும் வாகன ஓட்டிகள் செயல்பட வேண்டும் என்று கூறினார்.

மேலும் செய்திகள்