காங்கேயம் பஸ்நிலையத்தில் மேற்கூரையின் சிமெண்டு காரை பெயர்ந்து விழுந்தது; டிரைவர் காயம்
காங்கேயம் பஸ்நிலையத்தில் மேற்கூரையின் சிமெண்டு காரை பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் பஸ்டிரைவர் லேசான காயத்துடன் உயிர்தப்பினார்.;
காங்கேயம்,
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் நகராட்சிக்கு சொந்தமான பஸ்நிலையம் உள்ளது. இங்கு ஒரே வளாகத்தில் புறநகர் பஸ்நிலையம் மற்றும் நகர பஸ்நிலையம் தனித்தனியாக செயல்பட்டு வருகிறது. மேலும் பஸ்நிலையத்துக்குள் நகராட்சிக்கு சொந்தமான வணிகவளாகமும் அமைந்துள்ளது.
இங்கு 50–க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. திருச்சி–கோவை–திருப்பூர் போன்ற ஊர்களுக்கு செல்லும் முக்கிய வழித்தடத்தில் இந்த பஸ்நிலையம் அமைந்துள்ளது. இதனால், இங்கு எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
இந்த நிலையில் நேற்று காலை 8.30 மணியளவில் வெளியூர் பஸ்நிலையத்தில் அம்மா குடிநீர் விற்பனைநிலையம் அருகே மேற்கூரையில் இருந்து சிமெண்டு காரை திடீரென பெயர்ந்து ‘டமார்‘ என்ற சத்தத்துடன் விழுந்தது. சத்தம் கேட்டு அங்கு பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள், அலறியடித்துக்கொண்டு அங்கிருந்து ஓடினார்கள்.
அப்போது, அம்மா குடிநீர் விற்பனை நிலையம் முன் நின்று கொண்டிருந்த அரசு பஸ் டிரைவர் ஒருவரின் தோள்பட்டை மீது சிமெண்டு காரையின் ஒரு பகுதி விழுந்தது. இதில் அவர் லேசான காயத்துடன் உயிர்தப்பினார். சோமனூரில் பஸ்நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து 5 பேர் பலியான சம்பவம் நடந்து இரு நாட்களில் காங்கேயம் பஸ்நிலைய மேற்கூரையில் சிமெண்டு காரை பெயர்ந்து விழுந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுபற்றி தகவல் அறிந்த காங்கேயம் தாசில்தார் வெங்கடலட்சுமி, நகராட்சி ஆணையாளர் சுரேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சேதமடைந்த மேற்கூரையை பார்வையிட்டனர். கடந்த சில நாட்களாக பெய்த மழையால் மேற்கூரையில் மழைநீர் தேங்கி இருந்ததும், அது மேற்கூரையின் உள்ளே சென்றதால் அதன் அடியில் சிமெண்டு காரை பெயர்ந்து விழுந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து உடனடியாக, அந்த இடத்தை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். இது சிறிய விபத்து என்றாலும், கோவை மாவட்டம் சோமனூரில் நடந்தது போல் இங்கும் பெரிய அளவில் விபத்து ஏற்பாடாமல் இருக்க பஸ்நிலைய கட்டிடத்தையும், மேற்கூரைகளையும் முறையாக பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.