கோத்தகிரி பகுதியில் தொடர் மழை சாலையோர தடுப்பு சுவர் இடிந்து அந்தரத்தில் தொங்கும் வீடுகள்

கோத்தகிரி பகுதியில் தொடர் மழை காரணமாக சாலையோர தடுப்பு சுவர் இடிந்து விழுந்து வீடுகள் அந்தரத்தில் தொங்கியபடி உள்ளன.

Update: 2017-09-09 23:30 GMT

கோத்தகிரி,

கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலையில் பெய்த பலத்த மழை காரணமாக கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் சாலையோர தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது.

கட்டபெட்டு அருகே நெடுஞ்சாலை துறை சார்பில் கட்டப்பட்டு இருந்த தடுப்பு சுவரையொட்டி ஒரு பங்களாவின் தடுப்பு சுவர் கட்டப்பட்டு உள்ளது. 100 அடி நீளமும் சுமார் 40 அடி உயரமும் உள்ள அந்த தடுப்பு சுவர் தொடர் மழை காரணமாக நேற்று அதிகாலையில் இடிந்து விழுந்தது. இதனால் அருகே உள்ள தனியார் சொகுசு பங்களா அந்தரத்தில் தொங்கியபடி உள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கர பாண்டியன், குன்னூர் ஆர்.டி.ஓ. கீதா பிரியா, கோத்தகிரி தாசில்தார் மகேசுவரி, வருவாய் ஆய்வாளர் சீனிவாசன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயபிரகாஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். தடுப்பு சுவர் இடிந்ததால் அங்கு இருந்த மின்கம்பம் ஒன்று மண்ணில் புதைந்து காணப்பட்டது.

மேலும் பாரதிநகர், பாக்கியநகர் போன்ற பகுதிகளில் ஒரு சில வீடுகளும் அந்தரத்தில் தொங்கியடி உள்ளன. தொடர்ந்து மழை இருப்பதால் மேலும் மண் அரிப்பு ஏற்பட்டு வீடுகள் இடிந்து விழும் அபாய நிலை உள்ளன.

இந்த நிலையில் தடுப்பு சுவர் இடிந்ததில் தனியார் கட்டிடத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து உடனடியாக தடுப்பு சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்டிட உரிமையாளருக்கு அதிகாரிகள் நோட்டீசு அனுப்பி உள்ளனர்.

மேலும், இந்த சொகுசு பங்களா ஊராட்சியின் விதி முறைகளுக்கு உட்பட்டு கட்டப்பட்டு உள்ளதா? அல்லது விதிமுறைகள் மீறி கட்டப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்யப்படும் என வனவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தடுப்பு சுவர் இடிந்து விழுந்த சாலை அகலமாக இருந்ததால் பெரும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

மேலும் செய்திகள்