கொடைக்கானலில் ஒரே நாளில் 10 செ.மீட்டர் மழை பதிவு: ஏரிகளின் நீர்மட்டம் மளமளவென உயர்வு

கொடைக்கானல் பகுதியில் ஒரே நாளில் 10 செ.மீட்டர் மழை பெய்தது. இதன்காரணமாக நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்துள்ளது. இதனை மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் பார்வையிட்டார்.

Update: 2017-09-09 23:00 GMT

கொடைக்கானல்,

கொடைக்கானல் பகுதியில் கடந்த சில நாட்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பிற்பகல் 3.45 மணி முதல் இரவு 10 மணி வரை இடி– மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதில் அப்சர்வேட்டரியில் 103.8 மி.மீட்டரும், போட் கிளப்பில் 107 மி.மீட்டரும் மழை பதிவானது.

கொடைக்கானலில் ஒரே நாளில் 10 செ.மீட்டர் மழை பாதிவாகி உள்ளது. இதனால் நட்சத்திர ஏரிக்கு தண்ணீர் வரத்து மிகவும் அதிகரித்ததால் ஏரி முழுக்கொள்ளளவை எட்டியது. இதனால் உபரிநீர் ஏரிச்சாலையின் பல்வேறு பகுதிகளில் தேங்கி நிற்கிறது. இதனால் சாலை ஓர கடைகளில் தண்ணீர் புகுந்தது. மேலும் வாகனங்களை இயக்குவதிலும், பொதுமக்கள் நடந்து செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டது.

இதனையடுத்து நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இருப்பினும் அதிகமாக தண்ணீர் வந்து கொண்டிருந்ததால் மதகின் அருகில் இருந்த சுவர் உடைக்கப்பட்டது. இதனால் ஏரி தண்ணீர் சீறிப்பாய்ந்து வெளியேறியது. மேலும் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் தண்ணீர் கொட்டி வருகிறது.

இந்தநிலையில் நகருக்கு குடிநீர் வழங்கும் அணைகளின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி பழைய அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 1½ அடி உயர்ந்து 15 அடியாகவும் (மொத்த உயரம் 21 அடி), புதிய அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து 23.2 அடியாகவும் (மொத்த உயரம் 36 அடி) காணப்படுகிறது.

இதனிடையே கொடைக்கானலுக்கு வருகை தந்த மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் நகராட்சி ஆணையாளர் சரவணன், ஆர்.டி.ஓ. மோகன், தாசில்தார் பாஸ்யம், நகராட்சி பொறியாளர் சேகர் உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் நிரம்பி வழியும் நட்சத்திர ஏரி மற்றும் நகருக்கு குடிநீர் வழங்கும் அணைகளையும் பார்வையிட்டனர்.

அதனை தொடர்ந்து கலெக்டர் டி.ஜி.வினய் நிருபர்களிடம் கூறியதாவது:–

கொடைக்கானல் நகரின் குடிநீர் தேவையை நிரந்தரமாக தீர்க்கும் பொருட்டு கீழ்க்குண்டாறு திட்ட பணிகள் தற்போது விரைவாக நடைபெற்று வருகிறது. குறிஞ்சி ஆண்டவர் கோவில் அருகே குடிநீர் தொட்டி கட்டும் பணியில் தாமதம் ஏற்பட்டது. தற்போது அந்த தொட்டி வருவாய்த்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இப்பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடிவடையும். இதனிடையே தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்து வருகிறது. இதில் பழைய அணையின் உயரத்தை 21 அடியிலிருந்து 25 அடியாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி கரைகள் உயர்த்தப்பட்டு பலப்படுத்தப்பட உள்ளது. அத்துடன் தண்ணீரை வெளியேற்றும் குழாயும் மாற்றி அமைக்கப்பட உள்ளது. இதற்காக ரூ.30 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் விரைவில் முடிக்கப்படும். இதன் மூலம் நகருக்கு ஒரு ஆண்டு தேவைக்கான குடிநீரை சேமிக்க முடியும்.

மலைப்பகுதியில் மழைக்காலங்களில் ஏற்படும் சேதங்களை உடனடியாக அகற்றுவதற்காக பேரிடர் மீட்பு குழு அமைப்பது குறித்து போலீஸ்துறையின் சார்பில் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் பகுதியில் பொக்லைன் எந்திரங்கள் இயக்க தடை உள்ளது. இதையும் மீறி இயக்கப்படும் பொக்லைன் எந்திரங்கள் பறிமுதல் செய்யப்படும். இதற்காக பல்வேறு துறைகளை கொண்ட தனி கமிட்டி அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்