40 ஆண்டு கால பிரச்சினைக்கு தீர்வு: 2 கிராமங்களில் தனித்தனியாக பெயர் பலகை வைக்க ஐகோர்ட்டு உத்தரவு

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில்–பரமக்குடி சாலையில் அண்டூரணி, காயாஓடை ஆகிய கிராமங்கள் அடுத்தடுத்து அமைந்துள்ளன.

Update: 2017-09-09 23:00 GMT

மதுரை,

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில்–பரமக்குடி சாலையில் அண்டூரணி, காயாஓடை ஆகிய கிராமங்கள் அடுத்தடுத்து அமைந்துள்ளன. இந்த 2 கிராமங்களுக்கு இடையே ஊர் பெயர் பலகை வைப்பது தொடர்பாக கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்தநிலையில் அண்டூரணி கிராம பெயர் பலகை அப்புறப்படுத்தப்பட்ட இடத்தில் காயாஓடை என பெயர் பலகை வைக்கக்கோரி செல்வகுமார் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

முடிவில், “2 கிராமங்களின் வரைபடத்தை பார்க்கும்போது, நெடுஞ்சாலையின் ஒரு பக்கத்தில் காயாஓடை கிராமமும், மற்றொரு பக்கத்தில் அண்டூரணி கிராமமும் அமைந்துள்ளன. 2 கிராமங்களிலும் நிரந்தரமாக அமைதி ஏற்படுத்தும் வகையில், அந்தந்த கிராமத்தின் பெயர் பலகையை வைக்க வேண்டும். அதன்படி 2 கிராமங்களிலும் ஒரே அளவில் அந்தந்த கிராமத்தின் பெயர் பலகை இருக்க வேண்டும். அந்த பெயர் பலகையில் சம்பந்தப்பட்ட கிராமம் இருக்கும் திசையை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். 2 கிராமங்களிலும் தனித்தனியே பெயர் பலகை வைப்பது மட்டுமே அந்த ஊர்களுக்கு இடையே 40 ஆண்டுகளாக நிலவும் பிரச்சினைக்கு தீர்வு காணும் வழியாக முடியும். இதனால் 2 கிராமத்தினரும் தங்களின் பகைமையை மறந்து ஒற்றுமையாக இருப்பார்கள் என்று இந்த கோர்ட்டு நம்புகிறது“ என்று நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்