ஓமன் நாட்டில் கொத்தடிமைகளாக சிக்கி தவிக்கும் 50 தமிழர்களை மீட்க கோரிக்கை

ஓமன் நாட்டில் கொத்தடிமைகளாக சிக்கி தவிக்கும் 50 தமிழர்களை மீட்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Update: 2017-09-09 21:00 GMT

கோவில்பட்டி,

ஓமன் நாட்டில் கொத்தடிமைகளாக சிக்கி தவிக்கும் 50 தமிழர்களை மீட்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

கொத்தடிமைகள்

கோவில்பட்டி போஸ் நகரைச் சேர்ந்தவர்கள் பொன்ராஜ் (வயது 43), கண்ணன் மகன் மணிகண்டன் (25). பிளம்பர்களான இவர்கள் இருவரும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கோவில்பட்டியில் உள்ள டிராவல்ஸ் ஏஜென்சியில் தலா ரூ.60 ஆயிரம் செலுத்தி, ஓமன் நாட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்றனர். இவர்களை போன்று தமிழகம் முழுவதிலும் இருந்து 50–க்கும் மேற்பட்டவர்கள், அந்த நிறுவனத்துக்கு வேலைக்கு சென்றனர்.

அவர்களிடம் இருந்த பாஸ்போர்ட்டை பெற்று கொண்ட அந்த நிறுவனம், அவர்களுக்கு வார விடுமுறை வழங்காமல், தினமும் 12 மணி நேரத்துக்கும் அதிகமாக பல்வேறு வேலைகளை வழங்கியது. ஆனால் அவர்களுக்கு சம்பளம் வழங்காமல், கொத்தடிமைகளாக நடத்தியது. மின்வசதி இல்லாத சிறிய அறையில் அனைவரையும் தங்க வைத்த அந்த நிறுவனம், அவர்களுக்கு குறைந்த அளவு உணவே வழங்கியது. அவர்களை சொந்த ஊருக்கு செல்லவும் அனுமதிக்கவில்லை.

மீட்க கோரிக்கை

இதனால் பாதிக்கப்பட்ட தமிழர்கள், ஓமன் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்திடம் முறையிட்டும், எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதுகுறித்து மணிகண்டன் கோவில்பட்டியில் உள்ள தன்னுடைய உறவினர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து ஓமன் நாட்டுக்கு சென்ற மணிகண்டனின் உறவினர்கள், அந்த நிறுவனத்துக்கு ரூ.80 ஆயிரம் வழங்கி, மணிகண்டனின் பாஸ்போர்ட்டை பெற்று, அவரை சொந்த ஊருக்கு அழைத்து வந்தனர். இதேபோன்று அந்த நிறுவனத்தில் 50–க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொத்தடிமைகளாக சிக்கி தவிக்கின்றனர்.

ஓமன் நாட்டில் சிக்கி தவிக்கும் பொன்ராஜிக்கு முத்துலட்சுமி (36) என்ற மனைவியும், பிரியா (13) என்ற மகளும், சுரேஷ் (11) என்ற மகனும் உள்ளனர். முத்துலட்சுமி கூறுகையில், ஓமன் நாட்டில் கொத்தடிமைகளாக சிக்கி தவிக்கும் தன்னுடைய கணவர் உள்பட 50–க்கும் மேற்பட்ட தமிழர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்