தூத்துக்குடி மாவட்டத்தில் சூரியசக்தி மூலம் இயங்கும் பம்பு செட் 90 சதவீத மானியத்தில் பெற விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் 90 சதவீதம் மானியத்தில் சூரிய சக்தி மூலம் இயங்கும் பம்பு செட் பெற விண்ணப்பிக்கலாம்.

Update: 2017-09-09 20:30 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் 90 சதவீதம் மானியத்தில் சூரிய சக்தி மூலம் இயங்கும் பம்பு செட் பெற விண்ணப்பிக்கலாம், என மாவட்ட கலெக்டர்(பொறுப்பு) வீரப்பன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

பம்பு செட்

தமிழ்நாடு முதல்–அமைச்சர் அறிவிப்பின்படி விவசாயிகளுக்கு சூரிய சக்தி மூலம் இயங்கும் பம்பு செட்டுகள் வழங்கப்பட உள்ளன. இந்த பம்புசெட்டுகளுக்கு தேவை அதிகரித்து இருப்பதால், தமிழ்நாடு அரசு நடப்பாண்டில் இந்த மோட்டார் பம்புகளை 90 சதவீதம் மானியத்தில் வழங்க உள்ளது.

இதில் தமிழ்நாடு அரசின் மானியம் 40 சதவீதமும், மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையின் மூலம் 20 சதவீத மானியமும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மூலம் 30 சதவீதம் மானியமும் வழங்கப்பட உள்ளது. 10 சதவீதம் விவசாயிகள் பங்கு தொகையாக செலுத்த வேண்டும்.

நிபந்தனை

இந்த திட்டத்தின் கீழ் பம்புசெட் அமைக்க, விவசாயிகள் ஏற்கனவே இலவச மின் இணைப்பு பெற்றிருந்தால், அதனை விலக்கிக்கொள்வதற்கு சம்மதம் தெரிவித்து கடிதம் வழங்க வேண்டும். இலவச விவசாய மின் இணைப்பு பெற விண்ணப்பித்து, பதிவு மூப்புப்பட்டியல் வரிசையில் இருந்தால், மூப்புப் பட்டியலில் இருந்து தங்களது விண்ணப்பத்தை நீக்கிக் கொள்ள சம்மத கடிதம் வழங்க வேண்டும்.

மேற்கண்ட நிபந்தனைகளுக்கு சம்மதிக்கக்கூடிய விவசாயிகள் மானியத்தில் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் அமைப்பதற்கு விண்ணப்பிக்கலாம். கோவில்பட்டி, விளாத்திகுளம், புதூர், கயத்தாறு, ஓட்டப்பிடாரம் ஆகிய வட்டாரங்களைச் சேர்ந்த விவசாயிகள் கோவில்பட்டி வேளாண் பொறியியல் துறை உதவி செயற் பொறியாளர் அலுவலகத்தையும், தூத்துக்குடி, கருங்குளம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய வட்டாரங்களைச் சேர்ந்த விவசாயிகள் தூத்துக்குடி வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தையும், திருச்செந்து£ர், உடன்குடி, ஆழ்வார்திருநகரி, சாத்தான்குளம் ஆகிய வட்டாரங்களைச் சேர்ந்த விவசாயிகள் திருச்செந்தூர் வேளாண் பொறியியல் உதவி செயற் பொறியாளர் அலுவலகத்தையும் தொடர்பு கொள்ள வேண்டும், என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்