‘எதிர்மறை சிந்தனை’ சிறை தகர்ப்போம்!
இன்றைய இளம் பருவத்தினர் எதிர்மறை சிந்தனைகளால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்கின்றனர், ஆய்வாளர்கள்.
சிந்தனைதான் நம் அன்றாடச் செயல்பாட்டுக்கு அடிப்படையாக அமைகிறது.
எதிர்மறை சிந்தனை அதிகம் இருந்தால் அதற்கேற்பவும், ஆக்கபூர்வ சிந்தனைகள் இருந்தால் அதற்கேற்பவும் நம் செயல்பாடுகளும், முன்னேற்றமும் அமைகின்றன.
எனவே சிந்தனையில், மனோபாவத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
பொதுவாக எந்த மாதிரியான எதிர்மறை சிந்தனை ஓட்டங்கள் நம்மிடம் நிலவுகின்றன, அவற்றை எப்படித் தவிர்ப்பது என்று பார்க்கலாம்...
வெற்றி அல்லது ‘எதுவுமே இல்லை’...
அடைந்தால் அபார வெற்றியை அடைய வேண்டும் அல்லது ஒன்றுமே செய்யாமல் சும்மா இருக்க வேண்டும் என்று எண்ணுவது. இந்த மாதிரியான சிந்தனை உங்களை ஒரு பெரும் வெற்றியாளர் ஆக்கலாம் அல்லது ஒன்றுமில்லாத பூஜ்ஜியமாக்கலாம். எதிலும் முழுவெற்றியைத் தேடுவதாக இந்த மாதிரி சிந்தனையாளர்கள் எண்ணிக்கொள்கிறார்கள். ஆனால் இது நாளடைவில் உங்களின் தன்னம்பிக்கையைத்தான் குலைக்கும். உச்ச வெற்றியை நாடுவதில் தவறில்லை, ஆனால் சின்னச் சின்ன வெற்றிகளும் சந்தோஷம் தரும், உயர்ந்த இலக்கை நோக்கி நடைபோட உதவும் என்பதை உணருங்கள்.
‘இப்படித்தான் நடக்கும்’ என்ற எண்ணம்
ஏதாவது ஒன்று தவறாகப் போனால், அதுபோலத்தான் மீண்டும் மீண்டும் நடக்கும் என்று எண்ணி சுணங்கிப் போகாதீர்கள். உதாரணத்துக்கு, நீங்கள் ஒரு விஷயத்தில் பெரிதும் எதிர்பார்த்திருந்த நபர் கடைசி நேரத்தில் மறுப்புக் கூறினால், அடுத்த நபரும் அப்படியே சொல்வார் என்று உறுதியாக எண்ணுவது. அப்போது உங்கள் செயல்பாட்டில் இயல்பாக ஒரு தொய்வு ஏற்பட்டு, அதன் மோசமான தாக்கம் உங்களைத் தாக்கும்.
‘கறுப்பு’ பக்கத்தை மட்டும் பார்ப்பது
எந்த ஒரு சூழலிலும் அதன் கறுப்புப் பக்கத்தை மட்டும் பார்த்து, அதிலுள்ள சாதகமான அம்சங்களை கவனிக்கத் தவறுவது. உலகில் பல பிரச்சினைகள்தான் அவற்றுக்கான நிரந்தரத் தீர்வைத் தேட வைத்திருக்கின்றன, அதிரடி முன்னேற்றத்துக்கு அடிகோலியிருக்கின்றன என்ற உண்மையை உணருங்கள்.
நல்ல விஷயத்தையும் எதிர்மறையாக ஆக்குவது
சிலர், நடக்கும் நல்ல விஷயங்களையும் கூட தங்கள் சிந்தனையால் எதிர்மறையானதாக ஆக்கிவிடுவார்கள். எடுத்துக்காட்டாக, சம்பள உயர்வுடன் ஒரு புதிய பொறுப்பு வருகிறது என்றால், அந்தப் பொறுப்பு எப்படி இருக்குமோ, இதுவரை நமக்கு முன்பின் அனுபவமில்லையே? எப்படிச் சமாளிப்போம்? என்று எதிரான சிந்தனைகளை அடுக்கிக்கொண்டே செல்வது. இப்படி நமக்கு நடக்கும் நல்ல விஷயத்தையும் நமது தவறான சிந்தனையால் சிக்கலாக்கிக்கொள்ளக்கூடும்.
சின்னச் சின்ன விஷயங்களை பூதாகரமாக்குவது
சின்னச் சின்ன விஷயங்களுக்கு தங்கள் சிந்தனையால் ‘பூத’ உருக்கொடுத்து அதற்கு அவர்களே பயப்படும் பழக்கம் பலருக்கு இருக்கிறது. நமக்குப் பிடித்தமானவர்கள் நம் தொலைபேசி அழைப்பை ஒருமுறைக்கு இருமுறை எடுக்காமல் போனால் குறிப்பிட்ட நபருக்கு நம் மீது நட்பு, அன்பு இல்லை என்று நினைப்பது, மேல் அதிகாரி பணி பரபரப்பு கோபத்தில் கூறும் சில வார்த்தைகளை வைத்து, இது நம் வேலைக்கே உலை வைத்துவிடுமோ என்று எண்ணுவது.
பெரியதை சிறியதாகக் கருதுவது
சிறிய விஷயத்தை பெரிதாக எண்ணி அலட்டிக்கொள்வதைப் போல, நமது பெரிய சாதனையை நாமே மட்டந்தட்டிக்கொள்வது. எப்படி மிகையான தற்பெருமை நல்லதில்லையோ அதைப் போல நமக்கு நாமே நியாயமான பாராட்டுகளைத் தவிர்ப்பதும் சரியல்ல. இந்த மனோபாவம் வளர வளர, அது தீவிரமான மனக்கோளாறுகளுக்கு இட்டுச் செல்லும்.
சுருட்டிக்கொள்ளும் சுயபச்சாதாபம்
சூழ்நிலை கடினமாக மாறும்போது அதை எதிர்த்துப் போராட முயலாமல், ‘எனக்கு எப்போதுமே இப்படித்தான் நடக்கும்’ என்று சுயபச்சாதாபத்தில் சுருண்டுகொள்வது கூடாது. அதில் சுகம் காண ஆரம்பிப்பது ஆபத்து. நமது மனநிலைதான் நம் உடல்மொழியில் பிரதிபலிக்கிறது. எப்போதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் வளைய வருபவர்களுடனே வெற்றியாளர்கள் இணைய விரும்புவார்களே தவிர, புலம்பல் திலகங்களுடன் அல்ல.
குற்ற உணர்வும் அவமானமும்
நாம் அன்றாடம் இந்தந்த விஷயங்களை முடிக்க வேண்டும் என்று திட்டமிடுகிறோம், அன்றைய நாள் முடிவில் அவற்றை முடிக்காவிட்டால் குற்ற உணர்வும், அவமானமும் அடைகிறோம். மாறாக, எப்போதும் நம்மால் முடிந்த சிறந்த உழைப்பை, முயற்சியைக் கொடுப்பது, அதன் முடிவு எப்படி இருந்தாலும் ஏற்றுக்கொள்வது என்று இருங்கள். அதேபோல, நாம் நினைக்கும் விதத்தில் மற்றவர்கள் நடப்பதில்லை என்று எண்ணுவதால்தான் வெறுப்பும் கசப்பும் விளைகின்றன. நாம் நினைக்கும் விதத்தில் உலகம் இயங்குவதில்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
‘முத்திரை’ குத்துதல்
‘நான் ஒரு தோல்வியாளன்’, ‘பிறரைக் கவரத் தெரியாதவன்’, ‘டம்மி பீஸ்’ என்று நமக்கு நாமே பல முத்திரைகளை குத்திக்கொள்கிறோம். அவற்றை நாம் ஆழமாக நம்புவதால் அவை அழுத்தமாகப் பதிந்துபோகின்றன. ஒரு வெற்றியாளன்தான் மேலும் பல வெற்றியாளர்களை உருவாக்குவான். மாறாக, தமக்குத் தாமே இதுபோல மோசமாக முத்திரை குத்திக்கொள்பவர்கள், அதைப் போல பிறருக்கும் முத்திரை குத்த முயல்வார்கள். அது பிரச்சினையையும் பகைமையும் உண்டாக்கும்.
செய்யாத தவறை ஏற்றுக்கொள்வது
உங்களைச் சுற்றி தவறாக எது நடந்தாலும், அதற்கு உங்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டால் அது உண்மையில்லை என்றாலும் ஏற்றுக்கொள்வது. இது தைரியமான செயல் கிடையாது. மாறாக உங்களின் சுயமரியாதைக் குறைவையும் அதனுடன் இணைந்த எதிர்மறை சிந்தனை மனோபாவத்தையும்தான் இது காட்டுகிறது. செய்த தவறுக்கு பொறுப்பேற்பதும், செய்யாத தவறை மறுப்பதும்தான் வீரம்.
கடைசியாக, நமது சிந்தனைதான் செயலாக மாறுகிறது. செயல்தான் மாற்றங்களுக்கு வித்திடுகிறது. உலகில் நடந்த பெரும் மாற்றங்கள், மறுமலர்ச்சிகள் எல்லாம் ஆரம்பத்தில் ஒரு தனிநபரின் சிந்தனையில் பிறந்தவையே.
எனவே ஆக்கபூர்வ எண்ணங்களை வளர்த்திடுவோம், நம்மைச் சிக்கவைக்கும் சிந்தனைச் சிறைகளைத் தகர்த்திடுவோம்.