மனைவியை கொல்ல முயன்ற வாலிபர் கைது

காதலியை திருமணம் செய்யப்போவதாக கூறி மனைவியை கொல்ல முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Update: 2017-09-08 23:43 GMT

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் மொண்ணவேடு கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கல்பனா (வயது 25). இவருக்கு தந்தை இல்லை. தாய் மற்றும் சகோதரி உள்ளனர். இவர் பட்டாபிராமில் உள்ள கல்லூரியில் படிக்கும் போது அதே கல்லூரியில் படித்த போலிவாக்கம் விக்னேஸ்வர் நகரை சேர்ந்த பிரசாத் (27) என்பவர் ஒருதலை பட்சமாக காதலித்து வந்ததாக தெரிகிறது.

இந்தநிலையில் கல்லூரி படிப்பு முடித்து கூடப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கல்பனா பணிபுரிந்து வந்தார். இதனை அறிந்த பிரசாத் கடந்த 2014–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13–ந்தேதி வேலை முடிந்து கல்பனா வீடு திரும்பும் போது அவரை பின் தொடர்ந்து சென்று கற்பழிக்க முயன்றார்.

இது குறித்து கல்பனா வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார். போலீசாரும் பிரசாத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த பிரசாத் எல்.எல்.பி படித்தார். வக்கீல் பட்டம் பெற வேண்டுமானால் அவர் மீது குற்ற நடவடிக்கை எதுவும் இருக்கக்கூடாது. இதையடுத்து கல்பனாவுக்கு பிரசாத் ஆசை வார்த்தைகள் கூறி 2016–ம் ஆண்டு மே மாதம் 27–ந் தேதி பதிவு திருமணம் செய்து கொண்டார்.

அன்றையதினம் கல்பனாவுடன் உல்லாசமாக இருந்ததை அவருக்கு தெரியாமல் பிரசாத் வீடியோ எடுத்ததாக தெரிகிறது. கடந்த மாதம் (ஆகஸ்டு) 5–ந்தேதி அம்பத்தூரில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் கணவன்–மனைவியாக போட்டோ எடுத்துக் கொண்டனர். கற்பழிப்பு புகார் விசாரணையின் போது ஐகோர்ட்டு நீதிபதி முன்னிலையில் நாம் இருவரும் கணவன்–மனைவியாக மாறி விட்டோம் என்று கூற வேண்டும் இல்லை என்றால் நாம் உல்லாசம் இருந்ததை இன்டர்நெட், பேஸ் புக் போன்றவற்றில் வெளியிடுவேன் என்று பிரசாத் கல்பனாவை மிரட்டி உள்ளார். இதையடுத்து பிரசாத் கூறியதை போல் கல்பனா நீதிபதி முன் கூறியுள்ளார்.

அதன் பின்னர் வெள்ளவேடு போலீஸ் நிலையத்தில் கல்பனா கொடுத்த கற்பழிப்பு புகார் வழக்கை தனக்கு சாதகமாக பிரசாத் மாற்றி கொண்டார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் பெரியபாளையம் கோவிலுக்கு கல்பனாவை அழைத்து வந்த பிரசாத் தான் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் அந்த பெண்ணின் பெயரை தனது இடது கையில் பச்சை குத்தி வைத்துள்ளதாகவும் கல்பனாவிடம் கூறி உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரத்தில் கல்பனாவை ஓங்கி அறைந்த பிரசாத் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது வயிற்றில் குத்தி கொல்ல முயன்றார்.

இதனால் பயந்து போன கல்பனா பிரசாத்திடம் இருந்து தப்பித்து பெரியபாளையம் போலீஸ் நிலையத்துக்கு வந்து நடந்த சம்பவம் குறித்து புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரசாத்தை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்