தொழிற்சாலைகளை விரிவுபடுத்த ரூ.5 கோடி மானியம் தொழில்துறை இயக்குனர் மலர்கண்ணன் தகவல்

தொழிற்சாலைகளை விரிவுபடுத்த ரூ.5 கோடி வரை மானியம் வழங்கப்பட உள்ளதாக தொழில் மற்றும் வணிகத்துறை இயக்குனர் மலர்கண்ணன் கூறியுள்ளார்.;

Update: 2017-09-08 23:33 GMT

புதுச்சேரி,

புதுவை தொழில் மற்றும் வணிகத்துறை இயக்குனர் மலர்கண்ணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

மத்திய அரசின் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் அமைச்சகம் கிசான் சம்படா யோஜனா என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டத்தின்கீழ் காய்கனி, பால், இறைச்சி, கோழி, மீன், அரிசி, மாவு, பருப்பு, தானிய வகைகள், எண்ணெய் வகைகள், உணவு சுவையூட்டிகள், உணவு வண்ணங்கள், மசாலா, தேங்காய் மற்றும் காளான் பதப்படுத்துதல் சம்பந்தப்பட்ட புதிய தொழில் தொடங்கவும் இதுசம்பந்தமாக இருக்கின்ற தொழிற்சாலைகளை விரிவுபடுத்தவும், உணவு கெடாமல் பாதுகாத்தல், கொள்ளளவு விரிவாக்கம் மற்றும் நவீனப்படுத்திட திட்ட மதிப்பீட்டில் அதிகபட்சம் ரூ.5 கோடி வரை மானியம் வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் மத்திய மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்கள், கூட்டு நிறுவனங்கள், அரசு சார்பற்ற நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள், சுயஉதவி குழுக்கள், தனியார் நிறுவனங்கள், தனிநபர்கள், பங்குதாரர்களை கொண்ட நிறுவனங்கள் ஆகியோர் நிதியுதவி பெற தகுதியுள்ளவர்களாவர். இத்திட்டத்தின் கீழ் தொழில் முனைவோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதன் மூலம் பயனடைய விரும்புவோர் இணையதள முகவரி http://sampadamofpi.gov.in/cefppc/login.aspx மூலம் நேரடியாக விண்ணப்பிக்கலாம். திட்டம் குறித்த வழிகாட்டுதல்கள் மற்றும் நெறிமுறைகள் www.mofi.nic.in என்ற இணையதளத்தில் விளக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை மத்திய அரசின் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் அமைச்சகத்துக்கு அனுப்ப வருகிற 15–ந்தேதி கடைசிநாள் ஆகும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்