வருகிற 15–ந்தேதி தொடங்குகிறது: வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி

புதுவையில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி வருகிற 15–ந்தேதி தொடங்குகிறது என்று தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு தெரிவித்துள்ளார்.

Update: 2017-09-08 23:30 GMT

புதுச்சேரி,

புதுவை தலைமை தேர்தல் ஆணையர் கந்தவேலு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

இந்திய தேர்தல் ஆணையம் 1–1–2018ஐ தகுதிபெறும் தேதியாக கொண்டு புதுச்சேரி ஒன்றிய ஆட்சிப்பரப்பில் சட்டமன்ற தொகுதிகளின் 2018–ம் ஆண்டிற்கான புகைப்பட வாக்காளர் பட்டியல் சுருக்குமுறை திருத்தப்பணியினை நடத்த உத்தரவிட்டுள்ளது. அதன்படி வரைவு வாக்காளர் பட்டியல் வருகிற 15–ந்தேதி வெளியிடப்படும்.

அதைத்தொடர்ந்து உரிமை கோரிக்கைகளையும், ஆட்சேபனைகளையும் வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்காளர் பதிவு அதிகாரிகள், உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகள் அலுவலகங்களில் வருகிற 15–ந்தேதி முதல் அக்டோபர் மாதம் 14–ந்தேதி தாக்கல் செய்யலாம். இதற்கான வருகிற 24–ந்தேதி மற்றும் அக்டோபர் 8–ந்தேதி சிறப்பு முகாம்களும் நடத்தப்படும்.

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கல் மற்றும் சேர்த்தலுக்கான விண்ணப்பங்களை பரிசீலனை செய்வது நவம்பர் 16–ந்தேதி முடிவடையும், அதன்பின் துணை வாக்காளர் பட்டியல் டிசம்பர் 15–ந்தேதி தயாரிக்கப்படும். இறுதிவாக்காளர் பட்டியல் வருகிற ஜனவரி மாதம் 5–ந்தேதி வெளியிடப்படும்.

வாக்காளர் பட்டியலில் இடம்பெற விரும்புபவர்கள் இந்திய பிரஜையாக இருக்கவேண்டும். 1–1–2018 அன்று 18 வயது நிறைவு அடைந்தவர்களாக இருக்கவேண்டும். இந்திய குடியுரிமை சட்டப்படி ஒரு குறிப்பிட்ட பகுதியில் தொடர்ந்து வசித்து வருபவருடைய பெயர் மட்டுமே அந்த பகுதியில் சேர்க்கப்படும். இடம் பெயர்ந்த வாக்காளர்களின் பெயர்கள் அவர்கள் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வைத்திருந்தாலும்கூட அந்த பகுதியின் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும்.

ஆகையால் வாக்காளர் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு மாறும் போது அந்த புதிய பகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரியிடம் முன்னர் வசித்த இருப்பிடத்தின் முகவரியை தெரிவித்து தற்போது வசிக்கும் புதிய பகுதியில் பெயரை சேர்க்க விண்ணப்பிக்க வேண்டும். ஒரு பெயரை சேர்க்க விண்ணப்பம் கொடுத்த மனுதாரர் குறிப்பிட்ட நாளில் ஆஜராக கோரப்பட்டு அவரின் பெயரை சேர்ப்பதற்கு பரிந்துரை செய்தால், அன்றே அவரின் புகைப்படம் எடுக்கப்பட்டு அவருக்கு ஒரு வில்லை கொடுக்கப்படும்.

வாக்காளர் பட்டியல் இறுதியாக வெளியிடப்பட்டபின் பட்டியலில் புதியதாக சேர்க்கப்பட்டவர் வில்லையை காண்பித்து வாக்காளர் அட்டையை பெறலாம்.

கல்லூரி மாணவர்கள் தங்கள் பெயரை சேர்ப்பதற்கு கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள வாக்காளர்கள் பதிவு செய்யும் இடத்தை அணுகலாம். மேலும் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை பெற கல்லூரி வளாக அதிகாரியை அணுகலாம்.

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்