கவுரி லங்கேஷ் கொலை குறித்து நியாயமான முறையில் விசாரணை நடக்கிறது
கவுரி லங்கேஷ் கொலை குறித்து நியாயமான முறையில் விசாரணை நடைபெற்று வருவதாக முதல்–மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
முதல்–மந்திரி சித்தராமையா நேற்று மண்டியாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
பெங்களூருவில் பெண் பத்திரிகையாளரான கவுரி லங்கேஷ் கொலை குறித்து சிறப்பு விசாரணை குழுவினர் விசாரித்து வருகிறார்கள். விசாரணை எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளேன். விசாரணை குறித்த தகவல்களை அடிக்கடி கேட்டு பெற்றுக்கொண்டு வருகிறேன். கவுரி லங்கேஷ் கொலையை அரசு தீவிரமாக எடுத்து உள்ளது.கவுரி லங்கேஷ் கொலை குறித்த விசாரணை நியாயமான முறையிலும், எந்த விதமான பாரபட்சமும் இல்லாமலும் நடைபெற்று வருகிறது. சிறப்பு விசாரணை குழுவினர் நேற்று தான் (அதாவது நேற்று முன்தினம்) விசாரணையை தொடங்கியுள்ளனர். தற்போது முதற்கட்ட விசாரணை தான் நடந்து வருகிறது. அதனால் விசாரணை விவரங்களை பகிரங்கமாக வெளியே தெரிவிக்க முடியாது.
குறிப்பாக எந்த கோணத்தில் விசாரணை நடக்கிறது, யார்–யாரிடம் எல்லாம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது, எத்தனை நபர்களை பிடித்து விசாரிக்கிறார்கள் என்ற விவரங்களை தெரிவிக்க இயலாது. கொலையாளிகளை கண்டுபிடிக்க ஒரு வாரம், 10 நாட்கள் என்ற காலக்கெடு எதுவும் சிறப்பு விசாரணை குழுவுக்கு விதிக்கவில்லை. இது ஒரு முக்கிய கொலை வழக்கு என்பதால், அதுபோன்ற காலக்கெடு எதுவும் விதிக்க முடியாது. விசாரணையை விரைந்து முடிக்கவும், கொலையாளிகளை கைது செய்யவும் உத்தரவிட்டுள்ளேன்.கவுரி லங்கேஷ், அவரது தந்தை எல்லாருடனும் நான் பழகியுள்ளேன். கவுரி லங்கேஷ் குடும்பத்தினர் கேட்டுக் கொண்டால், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவும் அரசு தயாராக உள்ளது. மகதாயி நதிநீர் பிரச்சினையில் பேச்சு வார்த்தைக்கு கோவா, மராட்டிய அரசுகள் தயாராக இல்லை. இந்த விவகாரத்தில் அரசு மீது பா.ஜனதாவினர் தேவையில்லாமல் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள்.
இவ்வாறு முதல்–மந்திரி சித்தராமையா கூறினார்.