நக்சலைட்டுகளின் மறுவாழ்வுக்காக பாடுபட்டவர் கவுரி லங்கேஷ்

நக்சலைட்டுகளின் மறுவாழ்வுக்காக கவுரி லங்கேஷ் பாடுபட்டார் என்று சிக்கமகளூரு போலீஸ் சூப்பிரண்டு அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார்.

Update: 2017-09-08 23:19 GMT

சிக்கமகளூரு,

பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் வசித்து வந்தவர் கவுரி லங்கேஷ் (வயது 55). வார பத்திரிகை ஆசிரியரான இவரை கடந்த 5–ந்தேதி இரவு வீடுபுகுந்து மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் கர்நாடகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நக்சலைட்டுகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாநில அரசின் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் ஏராளமான நக்சலைட்டுகளை அவர் சரணடைய வைத்துள்ளார்.

இதனால் அவரை நக்சலைட்டுகள் கொலை செய்திருக்கலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கவுரி லங்கேஷ் குறித்து சிக்கமகளூரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

நக்சலைட்டுகளின் மறுவாழ்வுக்காக பாடுபட்டவர் கவுரி லங்கேஷ். நக்சலைட்டுகளை மனம் திருந்த செய்யும் அவரை, நக்சலைட்டுகளே சுட்டு கொன்றிருக்க வேண்டும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால், நக்சலைட்டுகளிடம் இருந்து அவருக்கு எந்தவித எதிர்ப்பும் வந்தது இல்லை. கவுரி லங்கேஷ், சிக்கமகளூரு மாவட்டத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 7 நக்சலைட்டுகளை சரணடைய வைத்துள்ளார். கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டபோது, முகநூலில் அவருக்கு எதிராக கருத்து தெரிவித்து இருந்த சந்தீப் என்பவரை அழைத்து விசாரணை நடத்தினோம். ஆனால் யாரையும் கைது செய்யவில்லை.

நக்சலைட்டுகளாக இருப்பவர்களை மனம் திருத்தி, அவர்களை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல கவுரி லங்கேஷ் பல முயற்சிகளை எடுத்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்