அரசு பஸ்–கார் மோதல் 2 பெண்கள் உள்பட 6 பேர் சாவு

பாகல்கோட்டை அருகே நேற்று அரசு பஸ்சும், காரும் மோதிக் கொண்டதில் 2 பெண்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக இறந்தனர்.;

Update: 2017-09-08 23:09 GMT

பெங்களூரு,

பாகல்கோட்டை மாவட்டம் பீலகி தாலுகா கூர்தி அருகே நேற்று காலையில் விஜயாப்புராவில் இருந்து உப்பள்ளி நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென்று அந்த பஸ்சும், எதிரே வந்த காரும் நேருக்குநேராக மோதிக்கொண்டன. இதில், காரின் முன்பக்கம் அப்பளம்போல் நொறுங்கியது. அரசு பஸ்சின் முன்பகுதியும் சேதம் அடைந்தது. இதையடுத்து, அரசு பஸ் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

காரில் பயணித்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடினார்கள். அவர்கள் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என அபயக்குரல் எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் பீலகி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள், காரின் உள்ளே சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, காரில் பயணித்த 2 பெண்கள் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது தெரியவந்தது. மேலும், 2 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடுவதும் தெரியவந்தது. இதையடுத்து படுகாயம் அடைந்த 2 பேரை மீட்ட போலீசார் சிகிச்சைக்காக அவர்களை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆஸ்பத்திரியில் அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும், இறந்தவர்களின் உடல்களையும் கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

போலீசாரின் விசாரணையில், இறந்தவர்களின் பெயர்கள் விஜயா சிண்டே(வயது 65), அமுல்(28), அனுமன் சிண்டே(60), பாண்டுரங்(24), சுக்ரீவ் பானுதாஸ்(45) மற்றும் கார் டிரைவர் நாகேஷ் என்ற நாகநாத்(32) என்பது தெரியவந்தது.

இவர்கள் அனைவரும் மராட்டிய மாநிலம் சோலாப்பூர் மாவட்டம் மாதா தாலுகா தாரபாலா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், இவர்கள் காரில் சிவமொக்கா வந்துவிட்டு மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பியபோது விபத்தில் சிக்கி இறந்ததும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து பீலகி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்