கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை வெளியேற்றும் வரை போராட்டம் தொடரும்

கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை வெளியேற்றும் வரை போராட்டம் தொடரும் என பேராசிரியர் ஜெயராமன் கூறினார்.

Update: 2017-09-09 01:30 GMT
திருவாலங்காடு,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஆழ்துளை கிணறு அமைத்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 30-ந்தேதி எண்ணெய் குழாய் உடைந்து கசிவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தில் மக்கள் மீது தடியடி நடத்தி மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேரை கைது செய்தனர். இதை கண்டித்தும், ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை வெளியேற்றக்கோரி கதிராமங்கலம் அய்யனார் கோவில் திடலில் நேற்று 59-வது நாளாக கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜாமீனில் வந்த பேராசிரியர் ஜெயராமன், போராட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

ஓ.என்.ஜி.சி. ஆய்வு பணியால் கதிராமங்கலத்தில் நிலத்தடி நீர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்காக மக்கள் அறவழியில் போராடி வருகின்றனர். அரசு சார்பில் குடிநீர் தேவைக்காக போடப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து வரும் தண்ணீர் செந்நிறத்துடன் வருகிறது. ஓ.என்.ஜி.சி. ஆழ்குழாய் அமைந்துள்ள பகுதிகளை சுற்றி வசித்து வருபவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். கதிராமங்கலத்தில் உள்ள மக்களுக்கு தோல் நோய் பரவலாக ஏற்படுகிறது.

கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் புதிய குழாய்களை பதிக்க தமிழக அரசு அனுமதிக்க கூடாது. காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும்.

குத்தாலம், கதிராமங்கலம் பகுதியில் மொத்தம் 49 எண்ணை ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. மாசுகட்டுப்பாட்டு வாரியம் எந்த குழாயும் பதிக்க அனுமதிக்க கூடாது. மக்களின் கோரிக்கையை ஏற்று கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்