‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி கல்லூரி மாணவர்கள் போராட்டம் விவசாயிகளும் ஆர்ப்பாட்டம் செய்தனர்

‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி கல்லூரி மாணவர்கள் மற்றும் விவசாயிகளும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2017-09-08 23:15 GMT

விழுப்புரம்,

‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரியும், ‘நீட்’ தேர்வுக்கு எதிராக போராடி தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் சாவுக்கு நீதிக்கேட்டும் தமிழகம் முழுவதும் மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். விழுப்புரம் மாவட்டத்திலும் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

இதில் அரசூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவிகள் நேற்றும் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களது போராட்டம் நேற்று 4–வது நாளாக நீடித்தது. இதில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் ‘நீட்’ தேர்வுக்கு எதிராக கண்டன கோ‌ஷங்களை எழுப்பினர்.

விழுப்புரத்தில் நேற்று காலை ‘நீட்’ தேர்வுக்கு எதிராகவும், மேலும் தொடர் போராட்டங்களை நடத்தி வரும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாயிகள், ஒழுங்குமுறை விற்பனைக்கூட தொழிலாளர்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 50–க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இதேபோல் தமிழ் மாநில கட்சி சார்பில் ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு மாவட்ட செயலாளர் சத்யராஜ் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தலைவர் ஆனந்தராஜ், ஒன்றிய செயலாளர்கள் நாகராஜ், ஜனார்த்தனன், கிளை செயலாளர் தேவசகாயம், ஒன்றிய இளைஞரணி தலைவர் மகாலிங்கம், மகளிர் அணி செயலாளர் பாத்திமா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்