கோர்ட்டு தடை உத்தரவு பிறப்பித்த நிலையிலும் 2–வது நாளாக நீடித்த அரசு ஊழியர்கள்–ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
கோர்ட்டு தடை உத்தரவு பிறப்பித்த நிலையிலும் நேற்று 2–வது நாளாக அரசு ஊழியர்கள்– ஆசிரியர்களின் வேலைநிறுத்த போராட்டம் நீடித்தது.
விழுப்புரம்,
பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்திட வேண்டும், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 7–வது ஊதிய குழுவின் அடிப்படையில் புதிய ஊதியம் நிர்ணயிக்க வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு ஊழியர்கள் – ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ‘ஜாக்டோ–ஜியோ’ அமைப்பு சார்பில் ஏற்கனவே அறிவித்தப்படி நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரையில் 64 அரசு ஊழியர் சங்கங்களை சேர்ந்தவர்களும், 12 ஆசிரியர் சங்கங்களை சேர்ந்தவர்கள் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்று இருக்கிறார்கள். நேற்று முன்தினம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு, கைதாகி விடுதலையானார்கள்.
இதற்கிடையே இவர்களது வேலை நிறுத்த போராட்டத்திற்கு தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு நேற்று முன்தினம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. இருந்த போதிலும், நேற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்ந்தனர்.
இதன் மூலம் 2–வது நாளாக நடந்த இந்த போராட்டத்தில் விழுப்புரம் மாவட்டம் பல்வேறு இடங்களில் போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் அரசு அலுவலகங்களில் குறைந்த அளவிலான ஊழியர்கள் மட்டுமே வந்திருந்தனர். பெரும்பாலான அலுவலகம் பூட்டிய நிலையில் கிடந்ததையும் பார்க்க முடிந்தது. இதனால் அன்றாட பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டதுடன், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.
இதேபோன்று, பள்ளிகளை பொறுத்தவரை பணிக்கு வராத ஆசிரியர்களுக்கு பதிலாக கற்கும் பாரத மைய ஆசிரியர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களை கொண்டு அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் இயங்க கல்வித்துறை அதிகாரிகள் தேவையான மாற்று ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
மாவட்டத்தை பொறுத்தவரை ஏற்கனவே 9 சதவீத ஆசிரியர்கள் முறையான விடுப்பில் உள்ள நிலையில் நேற்று 75 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு வந்தனர். 16 சதவீத ஆசிரியர்கள் மட்டுமே பணிக்கு வரவில்லை என்று கல்வித்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்நிலையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்தும் விழுப்புரத்திற்கு வந்து, மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் முன்பு ஒன்று திரண்டனர். தொடர்ந்து அவர்கள், தங்களது கோரிக்கைகளை கோஷங்களாக எழுப்பிய படி, ஊர்வலமாக பஸ்நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலுக்கு சென்றனர் அங்கு அவர்கள் அனைவரும் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் கள்ளக்குறிச்சி அம்பேத்கர் சிலை அருகிலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக அங்குள்ள நான்குமுனை சந்திப்புக்கு சென்று, சாலை மறியல் செய்ய முயன்றனர். அப்போது அங்கிருந்த போலீசார் மறியலில் ஈடுபட்டால் கைது செய்வோம் என்று தெரிவித்தனர். இதையடுத்து அனைவரும் மறியல் செய்யாமல் அங்கிருந்து கலைந்து சென்றனர்.