மாத்திரை வடிவில் தயார் செய்து தங்கத்தை வயிற்றுக்குள் மறைத்து வைத்து விமானத்தில் கடத்திய வாலிபர் கைது
மாத்திரை வடிவில் தயார் செய்து தங்கத்தை வயிற்றுக்குள் மறைத்து வைத்து விமானத்தில் கடத்திய வாலிபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
கோழிக்கோடு,
கோழிக்கோடுவை அடுத்துள்ள கரிப்பூர் விமான நிலையத்துக்கு அரபு நாட்டில் இருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளை அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்தனர்.
அப்போது சந்தேகத்துக்கு இடமான முறையில் நடந்து வந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக அளித்தார். இதையடுத்து அவரை எக்ஸ்ரே கருவி மூலம் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவருடைய வயிற்றுக்குள் சிறு, சிறு உருண்டை வடிவில் எதோ இருப்பது தெரியவந்தது.
இதனால் அதிகாரிகள் அவரை கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதையடுத்து அறுவை சிகிச்சை செய்தபோது, வயிற்றுக்குள் மாத்திரை வடிவில் 7 சிறிய உருண்டைகள் இருப்பது தெரியவந்தது. பின்னர் அவற்றை வெளியே எடுத்தனர்.
இதைத்தொடர்ந்து அவை சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அதிகாரிகள் சோதனை செய்தபோது அவை தங்கம் என்பது தெரியவந்தது. உடனே அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன்மதிப்பு ரூ.7 லட்சத்து 8 ஆயிரம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
விசாரணையில், அவர் கோழிக்கோடுவை அடுத்துள்ள கொடுவள்ளி பகுதியை சேர்ந்த நவாஸ் (வயது 34) என்பதும், தங்கத்தை உருக்கி மாத்திரை வடிவில் தயார் செய்து வயிற்றுக்குள் மறைத்து வைத்து கடத்தியது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் அவரை கைது செய்தனர். மேலும் தங்கத்தையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.