2 தொழிலாளர்களை கடித்து குதறிய சிறுத்தையை பிடிக்க கூண்டு, 4 இடங்களில் ரகசிய கேமரா

2 தொழிலாளர்களை கடித்து குதறிய சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்தனர். மேலும் அதன் நடமாட்டத்தை கண்டறிய 4 இடங்களில் ரகசிய கேமராக்களும் பொருத்தப்பட்டது.

Update: 2017-09-08 22:30 GMT

தாளவாடி,

தாளவாடி அருகே உள்ள பாரதிபுரத்தை சேர்ந்தவர் செல்வமணி. விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டத்தில் கர்நாடக மாநிலம் அமுச்சுவாடியை சேர்ந்த தொழிலாளர்கள் சிவமல்லு (வயது 30), சிவராஜ் (31) ஆகியோர் நேற்று முன்தினம் கரும்பு வெட்டிக்கொண்டு இருந்தார்கள்.

அப்போது வனப்பகுதியில் இருந்து வந்த ஒரு சிறுத்தை திடீரென அவர்கள் 2 பேர் மீது பாய்ந்து கடித்தது. இதனால் அவர்கள் ‘அய்யோ அம்மா காப்பாற்றுங்கள்‘ என்று அலறி துடித்தார்கள். சத்தம் கேட்டு ஓடிவந்த மற்ற தொழிலாளர்கள் சிறுத்தையை விரட்டினார்கள்.

பின்னர் காயம் அடைந்த தொழிலாளர்கள் இருவரும் தாளவாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்கள். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் பாரதிபுரத்தை சேர்ந்த விவசாயிகள், ‘வனப்பகுதியை விட்டு வெளியே தோட்டங்களுக்குள் வந்துவிட்ட சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்கவேண்டும்‘ என்று கோரிக்கை விடுத்தார்கள். இதற்கிடையே நேற்று முன்தினம் மாலை சம்பவ இடத்தை சத்தி புலிகள் காப்பக தலைமை வனபாதுகாவலர் அன்வர்தீன் வன ஊழியர்களுடன் வந்து பார்த்தார். பின்னர் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க 4 இடங்களில் ரகசிய கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டுள்ளது. மேலும் கரும்பு தோட்டத்தின் ஒரு பகுதியில் கூண்டு அமைக்கப்பட்டுள்ளது.

அந்த கூண்டின் மறுபக்கம் ஒரு ஆட்டுக்குட்டி கட்டப்பட்டுள்ளது. சிறுத்தை மீண்டும் அங்கு வந்தால் ஆட்டுக்குட்டியை வேட்டையாட அருகே செல்லும், அப்போது கூண்டுக்குள் மாட்டிக்கொள்வதுபோல் வனத்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்