நீட் தேர்வை எதிர்த்து ஆண்டாள் கோவில் கோபுரத்தில் ஏறி மாணவர்கள் போராட்டம்

நீட் தேர்வை எதிர்த்து மாணவர் அமைப்பினர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2017-09-08 23:00 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,

அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலையை தொடர்ந்து தமிழ்நாட்டில் நீட் எதிர்ப்பு போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.

நீட் தேர்வுக்கு எதிராகவும் மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும் பல்வேறு போராட்டங்கள் தினமும் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரத்தில் ஏறி நேற்று மாணவர் அமைப்பினர் திடீரென்று போராட்டம் நடத்தினார்கள். அதன் விவரம் வருமாறு:–

ஆண்டாள் கோவில் கோபுரம் 11 அடுக்குகளுடன் 196 அடி உயரம் கொண்டது. இந்த கோபுரத்துக்கு அச்சுறுத்தல் இருந்ததால் 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று காலை 9 மணி அளவில் அகில இந்திய மாணவர் பெருமன்றம் அமைப்பினர் 18 பேர் அருகில் உள்ள கட்டிடம் வழியாக கோபுரத்தில் ஏறினர்.

சுமார் 20 அடி உயரத்தில் ஏறி நின்றபடி அனிதாவின் உருவப் பட பேனரை பிடித்தபடி நீட் தேர்வை எதிர்த்தும் அதனை ரத்து செய்யக்கோரியும் கோ‌ஷமிட்டனர். இதனைக்கண்டதும் கோபுர பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனே நகர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். கோபுர கதவின் வழியாக மேலே சென்று போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அனைவரையும் கீழே அழைத்து வந்தனர்.

பின்னர் அவர்களை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இந்த போராட்டம் அந்தப் பகுதியில் சுமார் 30 நிமிடம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்