நெல்லையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தர்ணா போராட்டம் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தகோரிக்கை
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நெல்லையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
நெல்லை,
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நெல்லையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோரிக்கைகள்தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ–ஜியோ அமைப்பினர், அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு ஊழியர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் ஆகியவற்றை ஒழித்துவிட்டு அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஊதிய உயர்வு வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று முன்தினம் வட்டார அளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்று ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் நெல்லை சந்திப்பு ரெயில்நிலையம் முன்பு திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர். இதையொட்டி அங்கு நெல்லை மாநகர உதவி போலீஸ் கமிஷனர் மாரிமுத்து தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் மறியலில் ஈடுபடுபவர்களை கைது செய்து அழைத்து செல்வதற்காக ஏராளமான போலீஸ் வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
தர்ணா போராட்டம்ஆனால் ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடாமல் ரெயில்நிலையத்தின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒருங்கிணைப்பாளர்கள் பால்ராஜ், பார்த்தசாரதி ஆகியோர் தலைமை தாங்கி போராட்டத்தை தொடங்கிவைத்தனர். போராட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் மயில், மனோகரன், கணேசன், குமாரவேல், நாகராஜன், ஓய்வுபெற்ற தாசில்தார் கண.முருகானந்தம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
போராட்டத்தில் கலந்து கொண்ட சிலர் உடலில் பட்டை நாமம் போட்டு கலந்து கொண்டனர். சிலர் ரோட்டில் படுத்து கொண்டு கோஷம் எழுப்பினர். மாநில அரசை கண்டித்தும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்தில் ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், அரசு ஊழியர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தையொட்டி நெல்லை மாவட்டத்தில் உள்ள 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகள் இயங்கவில்லை. இதனால் அந்த பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.