அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தை விரைவில் கூட்டுவோம் டி.டி.வி.தினகரன் பேட்டி

எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தை விரைவில் கூட்டுவோம் என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.

Update: 2017-09-08 21:30 GMT

நெல்லை,

எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தை விரைவில் கூட்டுவோம் என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.

துரோகம் செய்தவர்

அ.தி.மு.க. (அம்மா அணி) துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று பாளையங்கோட்டையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவால் அறிவிக்கப்பட்டு முதல்–அமைச்சராக இருந்து வருபவர் எடப்பாடி பழனிசாமி. அவர், தன்னை முதல்–அமைச்சராக்கிய கட்சிக்கு துரோகம் செய்து விட்டு ஜெயலலிதா அமைத்து கொடுத்த ஆட்சியை ஊழல் ஆட்சியாக நடத்தி வருகிறார்.

கட்சிக்கு துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமியை, முதல்–அமைச்சர் பதவியில் இருந்து மாற்றுவதே எங்களின் நோக்கமாகும். இந்த ஆட்சி பெரும்பான்மையை இழந்து விட்டது.

கடும் நடவடிக்கை

அ.தி.மு.க.வின் பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கும், அவரால் நியமிக்கப்பட்ட துணை பொதுச்செயலாளருக்கும்தான் உள்ளது. கட்சியில் உள்ள மற்ற நிர்வாகிகளுக்கு அந்த அதிகாரம் கிடையாது. இதுதான் அ.தி.மு.க.வின் விதி. எனவே கட்சியில் உள்ள மற்ற நிர்வாகிகள் கூட்டுகிற கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ளக்கூடாது. அதையும் மீறி யாராவது கலந்து கொண்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆட்சியில் இருப்பதால் அவர்கள், அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தை ஆக்கிரமித்து உள்ளனர். அதை நாங்கள் மீட்போம். இரட்டை இலை சின்னத்தையும், கட்சியையும் முடக்கியவர் ஓ.பன்னீர்செல்வம். அவரை கூட்டு சேர்த்துக் கொண்டு எடப்பாடி பழனிசாமியால் எப்படி இரட்டை இலையை மீட்க முடியும். கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும் நாங்கள் நிச்சயம் மீட்போம்.

எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

உள்ளாட்சி தேர்தலில் பாரதீய ஜனதாவுடன் கூட்டணி வைப்போம் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சொன்னது அவருடைய சொந்த கருத்து. முதலில் உள்ளாட்சி தேர்தல் வரட்டும். அதன்பிறகு கூட்டணி பற்றி யோசிப்போம்.

அ.தி.மு.க.வில் உள்ள அனைத்து எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தையும் விரைவில் கூட்டுவோம். அதற்கான ஆயத்த வேலைகள் நடந்து வருகின்றன.

இவ்வாறு டி.டி.வி.தினகரன் கூறினார்.

நிர்வாகிகள் கூட்டம்

முன்னதாக நெல்லை புறநகர், மாநகர் மாவட்ட அ.தி.மு.க. (அம்மா அணி) செயற்குழு, பொதுக்குழு நிர்வாகிகள் கூட்டம் நெல்லை தெற்கு புறவழிச்சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமை தாங்கி நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.

கூட்டத்தில் அமைப்பு செயலாளர்கள் அண்ணாமலை, கல்லூர் வேலாயுதம், ஆர்.பி.ஆதித்தன், விஜிலா சத்யானந்த் எம்.பி., மாநகர் மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையா, முன்னாள் அமைச்சர் இன்பதமிழன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சாமி, மைக்கேல் ராயப்பன், கலை இலக்கிய அணி துணைசெயலாளர் ஆர்.எஸ்.கே.துரை, 5–வது வட்ட நிர்வாகி சுரேஷ்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் ஜெரால்டு, மாணவர் அணி செயலாளர் ஸ்ரீவை.சின்னத்துரை, பாளையங்கோட்டை பகுதி செயலாளர் அசன்ஜாபர்அலி, தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் எம்.சி.ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்