தந்தை பெரியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம்

‘நீட்’ தேர்வுக்கு எதிராக போராடிய மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை அடுத்து தமிழகம் முழுவதும் ‘நீட்’ தேர்வுக்கு எதிராக போராட்டம் வலுத்து வருகிறது.

Update: 2017-09-08 00:10 GMT

வேலூர்,

‘நீட்’ தேர்வுக்கு எதிராக போராடிய மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை அடுத்து தமிழகம் முழுவதும் ‘நீட்’ தேர்வுக்கு எதிராக போராட்டம் வலுத்து வருகிறது. அரசியல் கட்சியினர் ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரியும், அனிதா மரணத்துக்கு நீதி கேட்டும் சாலை மறியல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து மாணவர்களும் போராட்ட களத்தில் குதித்தனர்.

அதேபோல், வேலூர் மாவட்டத்திலும் மாணவர்கள் ‘நீட்’ தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் வேலூர் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி மாணவ– மாணவிகள், ஊரீசு கல்லூரி மாணவ– மாணவிகள் ஊர்வலமாக சென்றனர். மாணவர்களின் இந்தத் திடீர் போராட்டம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நேற்று வேலூரில் உள்ள தந்தை பெரியார் அரசு என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர். இதையடுத்து அவர்கள் வகுப்புகளுக்கு செல்லாமல் கல்லூரி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் அனிதாவின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும். ‘நீட்’ தேர்வை தமிழகத்தில் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் விதமாக கோ‌ஷங்களை எழுப்பினர். கல்லூரி நிர்வாகத்தினர், பேராசிரியர்கள் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தியும் மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்