கவுரி லங்கேஷ் கொலை குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழுவுக்கு முழு சுதந்திரம்
கவுரி லங்கேஷ் கொலை குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழுவுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாக போலீஸ் மந்திரி ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
பெங்களூருவில் நேற்று போலீஸ் மந்திரி ராமலிங்க ரெட்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
பெண் பத்திரிகையாளரான கவுரி லங்கேஷ் படுகொலை குறித்து உளவுத்துறை போலீஸ் ஐ.ஜி. பி.கே.சிங் தலைமையிலான சிறப்பு விசாரணை குழுவினர் விசாரிக்க முதல்–மந்திரி சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில், சிறப்பு விசாரணை குழுவினர் தங்களது விசாரணையை தொடங்கியுள்ளனர். கவுரி லங்கேஷ் கொலை குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழுவுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலம் மர்மநபர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கொலைக்கான ஆதாரங்களை போலீசார் திரட்டி வருகின்றனர்.
கவுரி லங்கேஷ் கொலைக்கும், எழுத்தாளர் கலபுரகி கொலைக்கும் சம்பந்தம் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் அந்த கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. எழுத்தாளர் கலபுரகி கொலை தொடர்பான விசாரணையில் சி.ஐ.டி. போலீசார் இறுதி கட்டத்தை எட்டியுள்ளனர். இதனால் கவுரி லங்கேஷ், எழுத்தாளர் கலபுரகி கொலைகளில் தொடர்புடைய கொலையாளிகள் கூடிய விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.கவுரி லங்கேஷ் கொலை குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூறி வருவதாக நீங்கள் (நிருபர்கள்) கேட்கிறீர்கள். இந்த கொலை குறித்து எந்த விதமான விசாரணைக்கும் உத்தரவிட அரசு திறந்த மனதுடன் இருப்பதாக ஏற்கனவே முதல்–மந்திரி தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.