பாகூர் தபால் நிலையம் முற்றுகை வகுப்புகளை புறக்கணித்து பள்ளி மாணவர்கள் போராட்டம்
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பாகூர் அரசு பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாகூர்,
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி புதுவை மற்றும் தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் கடந்த 4 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். பாகூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து பள்ளியை விட்டு வெளியேறினர். அங்கிருந்து தபால் நிலையத்திற்கு ஊர்வலமாக வந்தனர். திடீரென்று தபால் நிலையத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷம் எழுப்பினார்கள்.
இந்த போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து செயலாளர் ஜெயராஜ் தலைமை தாங்கினார். ஜனநாயக வாலிபர் சங்க செயலாளர் சரவணன், இந்திய மாணவர் சங்க தலைவர் ஆனந்து, முன்னாள் தலைவர் தமிழ்செல்வன் உள்பட 200–க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் பாகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். போலீசாரின் சமரசத்தை ஏற்று மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்த கலைந்து சென்றனர்.