திண்டுக்கல்லில் பரிதாப சம்பவம்: சாக்கடை கால்வாயில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு

திண்டுக்கல்லில், சாக்கடை கால்வாயில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டது.

Update: 2017-09-07 22:40 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. நேற்று மதியம் மருத்துவமனைக்கு மேற்கு பகுதியில் செல்லும் சாலையோர சாக்கடை கால்வாயில் பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டது. அந்த வழியாக சென்றவர்கள், குழந்தையின் சத்தம் கேட்டு சாக்கடை கால்வாயை பார்த்தனர்.

அங்கு ஆண் குழந்தை ஒன்று உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தது. இதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அந்த குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தைகள் வார்டில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அந்த குழந்தை அனுமதிக்கப்பட்டது.

சாக்கடை கால்வாயில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை 3 கிலோ எடை இருந்தது. அந்த குழந்தை பிறந்து 2 அல்லது 3 நாட்கள் இருக்கலாம் என்று டாக்டர்கள் கருதுகிறார்கள். பிறந்தபோது, 3 கிலோ 500 கிராம் வரை குழந்தையின் எடை இருந்திருக்கலாம் என்றும், தாய் சரியாக பராமரிக்காததால் எடை குறைந்திருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

குழந்தையின் தொப்புள் கொடியை டாக்டர்கள் துண்டித்ததற்கான அடையாளங்கள் இருக்கின்றன. இதனால் அந்த குழந்தை மருத்துவமனையில் பிறந்தது என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஆனால், அது திண்டுக்கல் அரசு மருத்துவமனையா அல்லது வேறு ஏதேனும் மருத்துவமனையா என்பது உடனடியாக தெரியவில்லை. அந்த குழந்தையை சாக்கடை கால்வாயில் வீசிய கல்நெஞ்சம் கொண்ட தாய் யார்? என்பதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இது குறித்து திண்டுக்கல் வடக்கு போலீசாருக்கு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், தவறான நடத்தையில் குழந்தை பிறந்ததால், பெற்ற தாயே குழந்தையை சாக்கடை கால்வாயில் வீசி இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறார்கள். மேலும், குழந்தையை பராமரிக்க முடியாததால் பெற்றோர் இந்த கொடூரமான காரியத்தை செய்தனரா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

முதற்கட்டமாக குழந்தையின் பெற்றோர் யார்? என்பதை அறிய திண்டுக்கல் மருத்துவமனையில் பிரசவத்துக்காக சேர்ந்து, குழந்தை பெற்ற தாய்மார்களின் பட்டியலை சேகரித்து போலீசார் துப்புதுலக்கி வருகிறார்கள். சாக்கடை கால்வாயில் குழந்தை வீசப்பட்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி இருக் கிறது.

மேலும் செய்திகள்