2017-18-ம் கல்வியாண்டில் புதிதாக 357 பாடப்பிரிவுகள் அறிமுகம் எடப்பாடி பழனிசாமி பேச்சு

தமிழகத்தில் 2017-18-ம் கல்வியாண்டில் புதிதாக 357 பாடப்பிரிவுகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Update: 2017-09-07 23:00 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் போப் கல்லூரி, தன்னாட்சி கல்லூரியாக தரம் உயர்வு பெற்று உள்ளது. இதன் தொடக்க விழா மற்றும் கல்லூரி அறிவியல் பிரிவு விரிவாக்க கட்டிடம் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை தாங்கினார்.

அமைச்சர்கள் உதயகுமார், ராஜலட்சுமி, தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல பிஷப் தேவசகாயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் செல்வக்குமார் வரவேற்று பேசினார்.

சிறப்பு அழைப்பாளராக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு தன்னாட்சி கல்லூரியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

சாயர்புரத்தில் ஜி.யு.போப் நினைவாக 1880-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பள்ளி, 1962-ம் ஆண்டு கல்லூரியாக மாற்றப்பட்டது. இந்த கல்லூரி சிறந்த உயர்கல்வி நிறுவனமாக திகழ்கிறது. உழைப்பு உயர்வு தரும் என்பதற்கு இந்த கல்லூரியே சான்று ஆகும். போப் கல்லூரி தரமான கல்வியை ஏழை, எளிய மாணவர்களுக்கு வழங்கி வருகிறது.

ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையாது என்பார்கள். எனவே பள்ளி பருவம், மாணவர் பருவம் ஒரு மனிதனை முழுமையாக உருவாக்கும் காலம் ஆகும். இந்த காலகட்டத்தில் கல்வி, நல்லொழுக்கம், நற்குணம், பணிவு, பொது அறிவு போன்றவை கற்பது மிகவும் முக்கியம். மாணவ-மாணவிகள், தங்களை திறமையாக உருவாக்கி கொண்டால் மகிழ்ச்சியாக வாழலாம். வீட்டுக்கும், நாட்டுக்கும் பெரிதும் பயன்படலாம்.

மாணவ-மாணவிகள் நலனில் பெரிதும் அக்கறை கொண்ட அரசு முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அரசு. 2011-ம் ஆண்டு ஜெயலலிதா முதல்-அமைச்சராக பொறுப்பேற்றபோது, உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை 21 சதவீதமாக இருந்தது. அதன்பிறகு ஜெயலலிதா மாணவர்கள் கல்வி பயில ஏராளமான திட்டங்களை கொடுத்தார். இதன் விளைவாக தற்போது உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை 44.3 சதவீதமாக உயர்ந்து உள்ளது.

தமிழ்நாடு கல்வியில் சிறந்த மாநிலமாக விளங்கி கொண்டு இருக்கிறது. இந்திய அளவில் பார்க்கும்போது, உயர்கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை 24.5 சதவீதம்தான். தமிழ்நாட்டில் தான் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து இருக்கிறது. கிராமத்தில் வாழும் ஏழை, எளிய, சாதாரண குடும்பத்தில் உள்ள மாணவ-மாணவிகளும் பட்டப்படிப்பு படிக்க முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 6 ஆண்டு கால ஆட்சியில் ஏராளமான கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் நிறுவப்பட்டன.

6 ஆண்டுகால ஆட்சியில் 4 என்ஜினீயரிங் கல்லூரிகள், 16 பாலிடெக்னிக் கல்லூரிகள், 21 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 24 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் ஆக மொத்தம் 65 கல்லூரிகள் தொடங்கப்பட்டு மாணவ-மாணவிகள் நல்வாழ்க்கைக்கு வித்திட்டவர் ஜெயலலிதா.

மாணவர்கள் சிறந்த கல்வி நிலையங்களில் தரமான உட்கட்டமைப்பு வசதிகளுடன் கல்வி பெற வேண்டும் என்ற அடிப்படையில் ரூ.100 கோடி மதிப்பிலான உட்கட்டமைப்பு திட்டத்தை ஜெயலலிதா அறிவித்தார். அதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

மாணவர்கள், அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப பல்வேறு பாடப்பிரிவுகளை கற்று வேலைவாய்ப்பு பெற வேண்டும் என்ற அடிப்படையில் கடந்த 6 ஆண்டுகளில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 961 பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. இதனை கையாளுவதற்கு தேவையான 1996 ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. அதனை நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உயர்கல்வித்துறை வரலாற்றில் முதல்முறையாக சுயநிதி கல்லூரிகளில் படிக்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவ-மாணவிகளுக்கான கல்வி கட்டணத்தை அரசே செலுத்த வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

வளர்ந்து வரும் தொழில்நுட்பத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கும் 4 லட்சத்து 20 ஆயிரத்து 851 இலவச மடிக்கணினி வழங்கிய பெருமை முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சாரும். அவர் எடுத்த நடவடிக்கையால், கிராமத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்த மாணவ, மாணவிகளின் கையிலும் மடிக்கணினி உள்ளது. அறிவுப்பூர்வமான, விஞ்ஞானப்பூர்வமான கல்வி கொடுத்த ஒரே முதல்-அமைச்சர் ஜெயலலிதா. இந்தியாவிலும் சரி, உலக அளவிலும் சரி இலவச மடிக்கணினி கொடுத்த ஒரே மாநிலம் தமிழ்நாடு.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் செயல்பட்டு வரும் அரசு 2017-18-ம் கல்வி ஆண்டில் 9 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, 3 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளை தொடங்கி உள்ளது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 268 புதிய பாடப்பிரிவுகளும், பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 89 புதிய பாடப்பிரிவுகளும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டை போற்றும் வகையில் 68 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2 ஆண்டுகளில் ரூ.210 கோடி மதிப்பில் புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்டப்பட்டு, அதற்கு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கட்டிடம் என்று பெயரிடப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டு உள்ளன. உயர்கல்விக்கு என்று கல்லூரி இல்லாத மாவட்டம் தமிழகத்தில் இல்லை என்ற நிலை உருவாக்கப்பட உள்ளது. சிறுபான்மை நலனில் மிகுந்த அக்கறை கொண்ட அரசாக இந்த அரசு உள்ளது. அரசு உதவி பெறும் கல்லூரி மட்டுமின்றி தனியார் சுயநிதி கல்லூரிகளுக்கும் சிறுபான்மை தகுதி அளிக்க அரசாணை வெளியிட்டு ஊக்குவித்து வருகிறது.

கல்வி சாதாரண விஷயம் இல்லை. கல்வி கற்றவருக்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு உண்டு. கல்வி செல்வம் தான் அழியாத செல்வம். இத்தகைய கல்வி செல்வத்தை இந்த கிராமத்திலேயே உருவாக்கி தந்து இருப்பது சிறப்பானது. இந்த கல்லூரி இதுவரை 40 ஆயிரம் கல்வியாளர்களை உருவாக்கி உள்ளது. இந்த கல்லூரி மேலும் வளர வேண்டும். இந்த பகுதியை சேர்ந்த அனைவரும் கல்வியாளராக உருவாக வேண்டும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

விழாவில் சண்முகநாதன் எம்.எல்.ஏ, எம்.பி.க்கள் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, பிரபாகரன், விஜயகுமார், முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர், பதிவாளர் ஜான் டி பிரிட்டோ, மாவட்ட கலெக்டர்(பொறுப்பு) வீரப்பன், நெல்லை திருமண்டல பிஷப் கிறிஸ்துதாஸ், தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல லே செயலாளர் ராஜன், துணைத்தலைவர் லூர்து ராஜ் ஜெயசிங், குருத்துவச்செயலாளர் தேவராஜ் ஞானசிங், பொருளாளர் மோகன், கல்லூரி துணை முதல்வர் இம்மானுவேல், போப் என்ஜினீயரிங் கல்லூரி தாளாளர் ராஜேஷ் ரவிச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மோகன், சின்னப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக தூத்துக்குடி மாவட்டத்துக்கு வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எட்டயபுரம் அருகே உள்ள சிந்தலக்கரையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு உள்ள வெட்காளியம்மன் கோவிலில் முதல்-அமைச்சர் தரிசனம் செய்தார். குறுக்குச்சாலை, தூத்துக்குடி புதூர்பாண்டியாபுரம் சுங்கச்சாவடி, காய்கனி மார்க்கெட் ஆகிய இடங்களிலும் முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மாநில இளைஞர், இளம்பெண்கள் பாசறை துணை செயலாளர் என்.சின்னத்துரை, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால் மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்