அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்: அரசு அலுவலகங்கள் வெறிச்சோடின

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், அரசு அலுவலகங்கள் வெறிச்சோடின. அரசு பள்ளிக்கூடங்கள் செயல்படவில்லை. சாலை மறியலில் ஈடுபட்ட 346 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2017-09-07 22:45 GMT
தூத்துக்குடி,

தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 8-வது ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், அதுவரை 01-01-16 முதல் 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அடங்கிய ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடந்தது.

இதனால், மாவட்ட கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், உதவி கலெக்டர் அலுவலகங்களில் ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. கல்லூரி பேராசிரியர்கள், பள்ளிக்கூட ஆசிரியர்களும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பதால் பல கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. பள்ளிகளும் இயங்கவில்லை.

தூத்துக்குடி

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி அரசு ஊழியர் சங்கம் முன்பு நேற்று காலை சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் பவுல் ஆபிரகாம் அந்தோணிராஜ், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் பிரான்சிஸ்ஹென்றி, தமிழ்நாடு தனியார் கல்லூரி அலுவலர் சங்க மாநில பொதுச் செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் ஜெயபால் பி.ராயர், பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில அமைப்பு செயலாளர் பூசைத்துரை, மூட்டா பொதுச்செயலாளர் நாகராஜன், ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். தொடர்ந்து பாளையங்கோட்டை ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்ட 131 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதே போன்று ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் அரசு ஊழியர் சங்கம் அருகே மாவட்ட தலைவர் கருணாகரன் தலைமையில் சாலைமறியல் போராட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் அல்போன்ஸ் லிகோரி கோரிக்கையை விளக்கி பேசினார். தொடர்ந்து பாளையங்கோட்டை ரோட்டில் மறியலில் ஈடுபட்ட 80 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஓட்டப்பிடாரம் தேரடி திடலில் நடந்த சாலை மறியல் போராட்டத்திற்கு அரசு ஊழியர்கள் சங்க வட்டார தலைவர் கருப்பசாமி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் ஊழியர் சங்க இணை செயலாளர் வாமணன், அரசு ஊழியர் சங்க வட்டார செயலாளர் ஆண்டிசாமி, சத்துணவு ஊழியர் சங்க மாநில துணை தலைவர் தமிழரசன், சாலை பணியாளர் சங்க மாவட்ட பொருளாளர் திருமலை, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஊழியர் சங்க மாவட்ட இணை செயலாளர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 135 பேரை போலீசார் கைது செய்தனர். 

மேலும் செய்திகள்