பிறந்த குழந்தை இறந்த சம்பவம்: திருச்சி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம்

திருச்சி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை உயிரிழந்த சம்பவத்தில் பணியில் இருந்த டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்காத நிர்வாகத்தை கண்டித்து மருத்துவமனையை முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்ட ஜனநாயக மாதர்-வாலிபர் சங்கத்தினர் 49 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-09-07 23:00 GMT
திருச்சி,

திருச்சி பொன்மலைப்பட்டி கொட்டப்பட்டு பகுதியை சேர்ந்த திருமுருகனின் மனைவி திவ்யா(வயது 21). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த திவ்யாவை, பிரசவத்திற்காக அவரது பெற்றோர் கடந்த மாதம் 19-ந்தேதி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திவ்யாவுக்கு, 20-ந்தேதி சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் உடல்நிலை சரியில்லாததால் சிசு தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தை 22-ந்தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அப்போது பணியில் இருந்த டாக்டர்கள், திவ்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்தனர்.

திவ்யாவுக்கு பிரசவத்தின் போதும், தீவிர சிகிச்சை பிரிவில் குழந்தை அனுமதிக்கப்பட்டிருந்த போதும் டாக்டர்கள் சரியான முறையில் சிகிச்சை அளிக்காததால் தான் குழந்தை இறந்தது என்று கூறி மருத்துவமனை வளாகத்தில் திவ்யாவின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பணியில் இருந்த டாக்டர்கள் மீது மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகத்தினரிடமும், அரசு மருத்துவமனை போலீஸ் நிலையத்திலும் புகார் தெரிவித்தனர். ஆனாலும் டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி கடந்த 26-ந்தேதி இந்த சம்பவம் தொடர்பாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் அரசு மருத்துவமனை போலீஸ் நிலையத்திலும், மருத்துவமனை கண்காணிப்பாளரிடமும் புகார் அளித்தனர்.

இந்நிலையில் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்காக நேற்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் திருச்சி மாவட்ட தலைவர் ரேணுகா தலைமையில் மாதர் சங்கத்தினரும், அவர்களுடன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருச்சி மாவட்ட துணைத்தலைவர் விஜேந்திரன், செயலாளர் லெனின் ஆகியோர் தலைமையில் வாலிபர் சங்கத்தினரும் மருத்துவமனை வந்தனர். இந்த போராட்டத்திற்கு போலீசாரின் அனுமதி மறுக்கப்பட்டதால் மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

திவ்யாவுக்கு பிரசவத்தின் போதும், தீவிர சிகிச்சை பிரிவில் குழந்தை அனுமதிக்கப்பட்டிருந்த போதும் டாக்டர்கள் சரியான முறையில் சிகிச்சை அளிக்காததால் தான் குழந்தை இறந்ததும் என்றும், டாக்டர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காத மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்தும், டாக்டர்களை போலீசார் கைது செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பியவாறு மாதர் சங்கத்தினரும், வாலிபர் சங்கத்தினரும் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

அப்போது போலீசார் மருத்துவமனை நுழைவு வாயிலின் இரும்பு கதவுகளை அடைத்தனர். இதனை தொடர்ந்து போராட்டக்காரர்கள் கதவுகளை தள்ளி மருத்துவமனைக்குள் நுழைய முயன்றனர். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்ற முயன்றனர். ஆனால் போராட்டக்காரர்கள் மருத்துவமனைக்கு முன்பு உள்ள சாலைக்கு ஓடி சென்று மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் மருத்துவமனையை முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்ட 49 பேரை கைது செய்து வேனில் ஏற்றி அருகே உள்ள திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்றனர். இதனை தொடர்ந்து போக்குவரத்தை போலீசார் ஒழுங்குபடுத்தினர். பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னதாக போராட்டக்காரர்களில் சிலர் மருத்துவமனைக்குள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்