ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. மேட்டூர் அணை நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்தது.

Update: 2017-09-07 23:00 GMT
பென்னாகரம்,

தமிழக-கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் தமிழக- கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்தது. காவிரி ஆற்றில் அவ்வப்போது நீர்வரத்து அதிகரிப்பதால் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. நேற்று முன்தினம் வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் வந்து கொண்டு இருந்த நீர்வரத்து நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 22,700 கனஅடியாக அதிகரித்தது.

இதனால் காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர் ஒகேனக்கல் ஐந்தருவி, மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் செந்நிறத்தில் ஆர்ப்பரித்து கொட்டியது. காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை நேற்று 7-வது நாளாக நீடித்தது. ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து அதிகரித்ததால் போலீசார் மெயின் அருவி, நடைபாதை, முதலை பண்ணை, பரிசல்துறை மற்றும் காவிரி கரையோர பகுதிகளில் ரோந்து சென்று கண்காணித்தனர்.

இந்தநிலையில் காவிரி ஆற்றில் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் பிலிகுண்டுலுவில் பரிசலில் சென்று அளந்து கண்காணித்தனர். அப்போது ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறையத்தொடங்கியது. மாலை 5 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடியாக குறைந்தது. இந்த நீர்வரத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். நேற்று ஒகேனக்கல்லுக்கு குறைவான சுற்றுலா பயணிகனே வந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவியில் குளித்தனர்.

இதனிடையே கர்நாடக மாநில அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை வந்தடைகிறது. அணை நீர்மட்டம் போதிய அளவு இல்லாததால் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. ஆனால் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 700 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வெளியேறிக்கொண்டு இருக்கிறது.

நேற்று முன்தினம் 67.62 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலை 8 மணிக்கு 69.05 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 14 ஆயிரத்து 751 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணைக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்குமானால் நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்பு உள்ளது. 

மேலும் செய்திகள்