50 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு: அஞ்செட்டி தொட்டள்ளா ஆற்றில் வெள்ளப்பெருக்கு

தொடர் கன மழையால் அஞ்செட்டி தொட்டள்ளா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் தரைப்பாலம் 4-வது முறையாக வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் 50 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப் பட்டது.

Update: 2017-09-07 23:00 GMT
தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்டது அஞ்செட்டி. இங்கிருந்து ஒகேனக்கல் செல்லும் சாலையில் தொட்டள்ளா ஆறு செல்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே புதிதாக பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் தற்காலிகமாக தரைப்பாலம் ஒன்று அமைக்கப்பட்டது. அந்த பாலத்தின் வழியாக அஞ்செட்டி - ஒகேனக்கல் இடையே வாகனங்கள் சென்று வருகின்றன.

கடந்த மே மாதம் குந்துகோட்டை, அருளாளம், காரண்டப்பள்ளி பகுதியில் கன மழை பெய்தது. இதனால் வெள்ளத்தில் அந்த தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது. இதன் காரணமாக அஞ்செட்டி - ஒகேனக்கல் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உடனடியாக தற்காலிக பாலம் உருவாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பெய்த கன மழைக்கு கடந்த ஆகஸ்டு மாதம் மீண்டும் பாலத்தில் உடைப்பு ஏற்பட்டது. இந்த உடைப்பு இரவோடு இரவாக சரி செய்யப்பட்டது.

அதன் பிறகு ஒரு சில நாட்களில் தேன்கனிக்கோட்டை சுற்று வட்டாரத்தில் 100 மில்லி மீட்டர் மழை பெய்தது. இதனால் தொட்டள்ளா ஆற்றில் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக அஞ்செட்டி - ஒகேனக்கல் இடையே அமைக்கப்பட்ட தற்காலிக தரைப்பாலம் மீண்டும் உடைந்தது. இதைத் தொடர்ந்து அதிகாரிகள் குழுவினர் அங்கு முகாமிட்டு மீண்டும் தற்காலிக பாலம் அமைக்கும் பணியை தொடங்கினார்கள். இதனால் 2 நாட்களுக்கு பிறகு போக்குவரத்து தொடங்கியது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தேன்கனிக்கோட்டை தாலுகா, தளி, அஞ்செட்டி சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நேற்று மதியம் 2 மணி அளவில், அஞ்செட்டி - ஒகேனக்கல் சாலையில் தொட்டள்ளா ஆற்றின் மீதுள்ள தரைப்பாலம் மீண்டும் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந் தனர். மேலும் வாகனங்கள் சாலையின் இருபுறமும் ஸ்தம்பித்து நின்றன.

நேற்று காலை அஞ்செட்டி சுற்று வட்டார பகுதி மாணவ, மாணவிகள் வழக்கம் போல பள்ளிக்கு சென்றிருந்த நிலையில் மாலையில் பாலம் உடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டதை கண்டு செய்வதறியாது திகைத்து நின்றனர். ஒரு சில மாணவர்கள் வீட்டிற்கு செல்ல முடியாதோ என்ற கவலையில் அழுதனர். இது குறித்து தகவல் அறிந்ததும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் உடனடியாக ஒகேனக்கல் பகுதியில் இருந்து பரிசல்கள் அங்கு வரவழைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பரிசல்கள் மூலமாக மாணவ, மாணவிகள் ஒரு கரையில் இருந்து மற்றொரு கரைக்கு அழைத்து செல்லப்பட்டனர். நேற்று மாலை 4 மணி முதல் இரவு 6 மணி வரை இந்த பணிகள் நடந்தது.

தற்போது தொட்டள்ளா ஆற்றில் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் உடனடியாக தற்காலிக தரைப்பாலம் அமைக்கும் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கேரட்டி, நாட்றாம்பாளையம், தொட்டமஞ்சி, ஜேசு ராஜபுரம், பிலிகுண்டுலு என 50-க்கும் மேற்பட்ட கிராமங் களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்