ஜாக்டோ- ஜியோ அமைப்பின் சார்பில் சாலைமறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள்- அரசு ஊழியர்கள் கைது

தஞ்சை மாவட்டத்தில் ஜாக்டோ- ஜியோ அமைப்பின் சார்பில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள்- அரசு ஊழியர்கள் 2 ஆயிரத்து 660 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2017-09-07 23:00 GMT
தஞ்சாவூர்,

தமிழ்நாடு அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டோ- ஜியோ) சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் 7-ந்தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தப்போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதையடுத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததையடுத்து நேற்று ஜாக்டோ- ஜியோ அமைப்பு சார்பில் போராட்டம் நடைபெற்றது.

சாலை மறியல்

தஞ்சை மாவட்ட ஜாக்டோ- ஜியோ அமைப்பின் சார்பில் தாலுகா அலுவலகங்கள், ரெயில் நிலையம் உள்பட 10 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது. தஞ்சை ரெயில் நிலையம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு மேல்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளி, அரசு ஊழியர் சங்கங்களின் வட்டார தலைவர்கள் ரகு, பாஸ்கரன், ராமச்சந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

இதில் மாவட்ட நிர்வாகிகள் இளையராஜா, கிட்டு, ரெங்கசாமி உள்பட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊதிய உயர்வு வழங்க வேண்டும், தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் போன்றவற்றை ஒழித்து முறையான காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

2,660 பேர் கைது

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்ச்செல்வன், இன்ஸ்பெக்டர்கள் மணிவேல், ஆரோக்கியதாஸ் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். இதில் 1,426 பெண்கள் உள்பட 2 ஆயிரத்து 660 பேர் கைது செய்யப்பட்டனர். அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் மறியல் போராட்டத்தினால் தஞ்சை காந்திஜி சாலையில் அரைமணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்