கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கைது

கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-09-07 23:00 GMT
மணப்பாறை,

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 7-வது ஊதியக்குழுவின் படி சம்பள உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் நேற்று முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.

அதன்படி நேற்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

அதன்படி திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திரண்டனர். பின்னர் கோரிக்கை குறித்து விளக்கிப் பேசி ஆர்ப்பாட்டம் செய்த அவர்கள் அங்கிருந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே கோஷங்கள் எழுப்பியபடியே வெளியே வந்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

மறியலில் ஈடுபட்ட 63 பெண்கள் உள்பட 162 பேரை மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு ஆசைத்தம்பி தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

இதேபோல மருங்காபுரி ஒன்றியப்பகுதி கோவில்பட்டியிலும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊர்வலமாக வந்து மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டி மேம்பாலம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட 139 பெண்கள் 246 பேரை வளநாடு போலீசார் கைது செய்தனர்.

லால்குடி தாலுகா அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர்(ஜியோ), லெட்சுமணன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட தலைவர்(ஜாக்டோ), அருள்ராபின்சன் தலைமையில் கூடிய தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழக ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம், ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு, தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் உள்ளிட்ட தோழமை சங்கங்களை சேர்ந்தவர்கள் ஊர்வலமாக வந்து திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங் களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்டதாக 118 பெண்கள் உட்பட 205 பேரை லால்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு செட்ரிக் இமானுவேல் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

முசிறி தாலுகா அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஜாக்டோ-ஜியோ வட்ட ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் தலைமை தாங்கினார். இதில் மாநில இளைஞர் அணி செயலாளர் நாகராஜன், மாநில துணைச் செயலாளர் பாலகிருஷ்ணன், மாநில துணைத்தலைவர் ஜோதிஹெலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாலுகா அலுவலகம் முன்பு திருச்சி-சேலம் மெயின்ரோட்டில் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 53 பெண்கள் உள்பட 125 பேரை முசிறி போலீசார் கைது செய்தனர்.

மண்ணச்சநல்லூர் தாலுகா அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் ஆரோக்கியராஜ் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 148 ஆசிரியர்களை மண்ணச்சநல்லூர் போலீசார் கைது செய்து தனியார் மண்டபம் ஒன்றில் அடைத்து வைத்திருந்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

தொட்டியம் தாலுகா அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு வணிக வரி பணியாளர்கள் சங்க மாநிலத்துணைத்தலைவர் வளன்அரசு தலைமையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மற்றும் சாலைமறியல் நடைபெற்றது. மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொட்டியம் தாலுகா அலுவலகம் எதிரே உள்ள திருச்சி-நாமக்கல் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 48 பெண்கள் உள்பட 52 பேரை தொட்டியம் போலீசார் கைது செய்தனர். 

மேலும் செய்திகள்