மாணவி வளர்மதி கோவை சிறையில் இருந்து விடுதலை ‘மக்கள் நலனுக்காக தொடர்ந்து போராடுவேன்’ என்று பேட்டி

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராடி குண்டர் சட்டத்தில் கைதான சேலம் மாணவி வளர்மதி கோவை சிறையில் இருந்து விடுதலையானார். . ‘மக்கள் நலனுக்காக தொடர்ந்து போராடுவேன்’ என்று அவர் கூறினார்.

Update: 2017-09-07 23:45 GMT
கோவை,

சேலம் பெரியார் பல்கலைக்கழக மாணவி வளர்மதி. இவர் நெடுவாசல் மற்றும் கதிராமங்கலம் போராட்டங்களுக்கு ஆதரவாக துண்டு பிரசுரத்தை வினியோகித்து, மாணவர்களை போராட்டத்திற்கு தூண்டியதாக கடந்த ஜூலை மாதம் சேலம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். மாணவி வளர்மதி தேச நலனுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி, அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கோவை சிறையில் அடைத்து சேலம் நகர போலீஸ் கமிஷனர் கடந்த ஜூலை மாதம் 17-ந்தேதி உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து மாணவி வளர்மதி கோவை சிறையில் அடைக்கப்பட்டார். மாணவி வளர்மதியின் தந்தை மாதையன் தாக்கல் செய்த மனுவின் மீது விசாரணை நடத்திய சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள், வளர்மதி மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர். இதற் கான உத்தரவு நகல் கோவை சிறை சூப்பிரண்டு செந்தில்குமாருக்கு நேற்று தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து நேற்று மாலை 4.30 மணியளவில் சிறையில் இருந்து மாணவி வளர்மதி விடுவிக்கப்பட்டு வெளியே வந்தார். அப்போது சிறை முன்பு மாணவர் எழுச்சி இயக்கத்தினர் திரண்டு நின்று தாரை தப்பட்டை முழங்க வளர்மதிக்கு வரவேற்பு அளித்தனர். ‘அடக்கு முறைக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்’ என்றும் கோஷம் எழுப்பினார்கள்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் விடுதலை கழகம், தமிழ்ப்புலிகள் அமைப்பு, தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர்களும் கலந்துகொண்டு வளர்மதியை வரவேற்றனர்.
தன்மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையை கண்டித்து சிறை முன்பு கோஷம் எழுப்பிய வளர்மதி, பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உலக அளவில் இந்தியா ஜனநாயக நாடு என்று கூறப்படுகிறது. ஆனால் இங்கு மக்கள் நலனுக்காகவும், அடிப்படை உரிமைக்காகவும் போராடினால் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நீட் தேர்வினால் பாதிக்கப்பட்ட மாணவி அனிதா தற்கொலை செய்யவில்லை. மத்திய, மாநில அரசுகளால் கொலை செய்யப்பட்டுள்ளார். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக மத்திய அரசு செயல்படுகிறது. நீட்தேர்வுக்கு எதிராகவும்,

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகவும் மக்களின் நலனுக்காகவும் எனது போராட்டத்தை தீவிரப்படுத்துவேன். மக்கள் நலனுக்காக போராடுபவர்களை நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் என்று கூறி எங்கள் போராட்டத்தை யாரும் ஒடுக்க முடியாது. காவல்துறையினர் அரசின் கைக்கூலிகளாக செயல்படக்கூடாது.

மேலும் செய்திகள்