பெண் சப்-இன்ஸ்பெக்டரிடம் அத்துமீறிய வீடியோ காட்சி விவகாரம்: போலீஸ் உதவி கமிஷனர் டி.ஜி.பி. அலுவலகத்தில் ஆஜர்

பெண் சப்-இன்ஸ்பெக்டரிடம் அத்துமீறியது போல் வெளியான வீடியோ காட்சியினால், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட போலீஸ் உதவி கமிஷனர் ஜெயராம் டி.ஜி.பி. அலுவலகத்தில் நேற்று ஆஜரானார்.;

Update: 2017-09-07 23:30 GMT
கோவை,

மேலும் முதல்கட்ட விசாரணையில் அவர் தவறான நோக்கத்துடன் நடக்கவில்லை என்பது தெரியவந்தது.

கோவை காந்திபுரத்தில் கடந்த 4-ந் தேதி மாணவர்கள் நடத்திய சாலை மறியல் போராட்டத்தின்போது, போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதில் கூட்டநெரிசலில் கோவை நகர போலீஸ் உதவி கமிஷனர் ஜெயராம், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரிடம் அத்துமீறி நடந்துகொண்டது போன்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இதற்கு பல்வேறு அமைப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து உதவி போலீஸ் கமிஷனர் ஜெயராம் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.

மேலும் அவர், சென்னையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்தில் ஆஜர் ஆகுமாறும் உத்தரவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து ஜெயராம் நேற்று டி.ஜி.பி. அலுவலகத்தில் ஆஜரானார். நடந்த சம்பவங்கள் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளிடம் விளக்கம் அளித்தார்.

இந்த பிரச்சினை தொடர்பாக கோவை நகர துணை போலீஸ் கமிஷனர் லட்சுமி விசாரணை நடத்தி வருகிறார். சம்பவ இடத்தில் பாதுகாப்புக்காக இருந்த இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசாரிடம் விசாரணை நடத்தினார். மேலும் வீடியோ காட்சியில் இடம்பெற்ற பெண் சப்-இன்ஸ்பெக்டரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பெண் சப்-இன்ஸ்பெக்டர் கூட்டத்தை கட்டுப்படுத்த முயன்றபோது ஏதேச்சையாக நடைபெற்றதாகவும், இதுதொடர்பாக உதவி கமிஷனர் மீது புகார் அளிக்க விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

விசாரணை அதிகாரியான துணை கமிஷனர் லட்சுமி கூறும்போது, ‘முதல்கட்ட விசாரணையில் உதவி கமிஷனர் பெண் சப்-இன்ஸ்பெக்டரிடம் தவறான நோக்கத்துடன் நடந்துகொள்ளவில்லை என்றும், கூட்டத்தை கட்டுப்படுத்தவும் மறியல் செய்தவர்களை கைது செய்யவும் முயன்றபோது ஏதேச்சையாக பெண் சப்-இன்ஸ்பெக்டர் மீது கைபட்டுள்ளது என்றும் தெரியவந்துள்ளது. விசாரணை இன்னும் முடியவில்லை. விசாரணை அறிக்கை விரைவில் போலீஸ் கமிஷனர் மூலம் டி.ஜி.பி. அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்’ என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்