‘நீட்’ தேர்வுக்கு எதிர்ப்பு: கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் - உள்ளிருப்பு போராட்டம் 56 பேர் கைது

கோவையில் ‘நீட்‘ தேர்வை ரத்து செய்யக்கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மேலும் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-09-07 22:30 GMT
கோவை,

மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கோரியும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் கோவை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது. கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்ட நிலையிலும் நேற்று காலை ஏராளமான மாணவர்கள் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கல்லூரி முன்பு திரண்டனர்.

பின்னர் மாணவர்கள் கல்லூரிக்குள் நுழைந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து செல்லும்படி அவர்களிடம் கூறினர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 16 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்திய மாணவர் சங்கம் சார்பில் நேற்று மதியம் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி அவினாசி சாலையில் உள்ள ஹோப்ஸ் பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட தலைவர் தினேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். மறியல் போராட்டத்தால் இந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், இருபுறமும் வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மாணவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட மறுத்தனர். இதனை தொடர்ந்து போலீசார் அவர்களை குண்டு கட்டாக தூக்கி வேனில் ஏற்றினர். மறியலில் ஈடுபட்ட 40 மாணவர்கள் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித் தனர்.

மேலும் செய்திகள்