திருத்தணி மலையில் பாறை இடுக்கில் சிக்கிய மாணவர் தீயணைப்புத்துறையினர் மீட்டனர்

திருத்தணி மலையில் பாறை இடுக்கில் சிக்கிய மாணவரை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.

Update: 2017-09-08 00:15 GMT

திருத்தணி,

திருத்தணி அருகே உள்ள கீழாந்தூரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் ராக்கி (வயது 17). இவர் திருத்தணியில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12–ம் வகுப்பு படித்து வருகிறார்.

ராக்கி நேற்று காலை தனது நண்பர்கள் 3 பேருடன் திருத்தணி முருகன் கோவில் அருகில் உள்ள 2–வது மலைக்கு உல்லாச பயணம் சென்றார். அடர்ந்த மரங்கள், பாறைகள் வி‌ஷப்பாம்புகள் நிறைந்த அந்த மலை உச்சியில் அவர்கள் அனைவரும் ஆடிப்பாடிக்கொண்டு இருந்தனர். அப்போது ராக்கி திடீர் என தவறி விழுந்ததில் அங்குள்ள பாறை இடுக்கில் சிக்கிக் கொண்டார்.

மாணவரின் கால்கள் மீது 2 பாறாங்கற்கள் உருண்டு வந்து விழுந்தன. இதில் ராக்கி வலியால் அலறி துடித்தார்.

அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் ராக்கி கால்கள் மீது விழுந்த ஒரு பாறையை அகற்றினார்கள். மற்றொரு பாறையை அவர்களால அகற்ற முடியவில்லை.

இதைத்தொடர்ந்து நண்பர்கள் 3 பேரும் கீழே இறங்கி வந்து கீழாந்தூரில் உள்ளவர்களிடம் தகவல் தெரிவித்தார்கள். இது குறித்து தகவல் அறிந்த திருத்தணி தீயணைப்புத்துறை அலுவலர் பாஸ்கர் தலைமையில் தீயணைப்புத்துறை வீரர்கள் மலைக்கு உடனே சென்று அங்கு பாறைகள் இடுக்கில் சிக்கித் தவித்துக் கொண்டு இருந்த ராக்கியை 1 மணி நேரம் போராடி மீட்டனர்.

நேற்று காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மாணவர் ராக்கி தன்னந்தனியாக பாறை இடுக்கில் சிக்கித் தவித்தார். வி‌ஷப்பாம்புகள் அதிக அளவில் இருக்கும் மலையில் மாணவர் ராக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராக்கியை காப்பாற்றியதற்காக மாணவரின் பெற்றோர் தீயணைப்பு துறை வீரர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

தற்போது மாணவர் ராக்கி சிகிச்சைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகள்