ஜாக்டோ, ஜியோ அமைப்பினர் மறியல்; 435 பேர் கைது
3 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ, ஜியோ அமைப்பினர் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 435 பேர் கைது செய்யப்பட்டனர்.;
திருவள்ளூர்,
திருவள்ளூர் தாசில்தார் அலுவலக வளாகத்தில் நேற்று திருவள்ளூர் மாவட்ட ஜாக்டோ, ஜியோ அமைப்பு சார்பில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், 7–வது ஊதியக்குழு முரண்பாடுகளை களைந்து 8–வது ஊதியக்குழுவை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு ஜாக்டோ, ஜியோ அமைப்பின் உயர்மட்ட குழு ஒருங்கிணைப்பாளர் தாஸ் தலைமை தாங்கினார்.
உயர்மட்டக்குழு உறுப்பினர் சீனிவாசன், நிர்வாகிகள் இளங்கோவன், ஞானசேகரன், குப்புசாமி, ஜம்பு, அருணன், கலைச்செல்வி, ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 300–க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் கலந்து கொண்டு 3 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பணியை புறக்கணித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் அவர்கள் திடீரென திருவள்ளூர்– திருப்பதி நெடுஞ்சாலையான திருவள்ளூர் தாசில்தார் அலுவலகம் எதிரே சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் சாலையில் இருபுறமும் அணிவகுத்து நின்றன. போலீசார் மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என 435 பேரை கைது செய்து திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அனைவரையும் விடுவித்தனர். இதன் காரணமாக அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.