குரோம்பேட்டை அருகே கழுத்தை அறுத்து வாலிபர் கொலை முட்புதரில் உடல் வீச்சு

குரோம்பேட்டை அருகே கழுத்தை அறுத்து வாலிபர் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் முட்புதரில் வீசப்பட்டு கிடந்தது.

Update: 2017-09-07 22:45 GMT

தாம்பரம்,

சென்னையை அடுத்த குரோம்பேட்டை அருகே உள்ள அஸ்தினாபுரம் பொன்னியம்மன் கோவில் தெருவில் தனியார் விடுதி ஒன்று உள்ளது. இங்கு ரூபன்பாபு என்பவர் தன்னுடைய மனைவி கவுரியுடன் தங்கி இருந்தார். கணவன்–மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் கவுரி, தனது தாய் வீட்டுக்கு சென்று இருந்தார்.

நேற்று முன்தினம் இரவு ரூபன்பாபு, தனது மனைவி கவுரியை செல்போனில் தொடர்பு கொண்டு ‘‘நீ விடுதிக்கு வர வேண்டாம். விடுதியின் மொட்டை மாடியில் நண்பர்களுடன் சேர்ந்து ஒருவரை கொலை செய்து விட்டோம். அங்கு ரத்தக்கறையாக உள்ளது’’ என்று கூறினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கவுரி, விடுதிக்கு சென்று மொட்டை மாடியில் பார்த்த போது அங்கு ரத்தக்கறை படிந்து இருப்பதை கண்டு திடுக்கிட்டார். இதுபற்றி அவர், சிட்லபாக்கம் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்த போது, அந்த விடுதியின் அருகே உள்ள முட்புதரில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வாலிபர் பிணம் கிடந்தது. பிணத்தை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்த கோபி(வயது 28) என தெரியவந்தது. ரூபன்பாபு தனது நண்பர்களுடன் சேர்ந்து விடுதியின் மொட்டை மாடியில் வைத்து கோபியை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, உடலை அருகில் உள்ள முட்புதரில் வீசி சென்று இருப்பது தெரிந்தது.

சம்பவம் தொடர்பாக சிட்லபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கோபி கொலை செய்யப்பட்டாரா? அல்லது முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா? என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.

ரூபன் பாபு மற்றும் அவருடைய நண்பர்கள் தலைமறைவாகி விட்டனர். அவர்கள் பிடிபட்டால் தான் கோபி கொலைக்கான உண்மையான காரணம் என்ன? என்பது தெரியவரும். கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்