சென்னை புறநகரில் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள்–ஆசிரியர்கள் கைது

சென்னை புறநகரில் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், பள்ளி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

Update: 2017-09-07 23:00 GMT

தாம்பரம்,

ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள்–ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து இருந்தனர்.

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் ஈரோட்டில் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு ஜாக்டோ–ஜியோ அமைப்பில் பிளவு ஏற்பட்டது. போராட்டத்தை தள்ளிவைப்பதாக ஒரு தரப்பும், திட்டமிட்டபடி போராட்டத்தை தொடருவோம் என மற்றொரு தரப்பும் அறிவித்தனர்.

அதன்படி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெரும்பாலான அரசு பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். குன்றத்தூர் ஒன்றியத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியர்கள் ஜாக்டோ–ஜியோ சார்பில் பல்லாவரத்தில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

பின்னர் அம்பேத்கர் சிலை அருகில் இருந்து ஊர்வலமாக வந்த ஆசிரியர்கள், திடீரென ஜி.எஸ்.டி. சாலையில் மறியல் செய்ய முயன்றனர். இதையடுத்து 300–க்கும் மேற்பட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அனைவரும் அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு, மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

போராட்டத்தில் கலந்துகொண்ட ஜாக்டோ–ஜியோ உயர்மட்டகுழு உறுப்பினர் தியாகராஜன் கூறும்போது, ‘‘முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் நடந்த பேச்சுவார்த்தையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக அவர் எந்த உத்தரவாதமும் அளிக்காததால் வேறு வழி இன்றி காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கி உள்ளோம். இந்த போராட்டத்தில் பெரும்பாலான சங்கங்கள் கலந்துகொண்டு உள்ளன. ஒரு சில ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் போராட்டத்தை தள்ளி வைப்பதாக அறிவித்து உள்ளனர். எங்களின் போராட்டத்தை பார்த்து விட்டு நாளைக்கே அவர்களும் எங்களுடன் போராட்டத்தில் கலந்துகொள்வார்கள்’’ என்றார்.

இதேபோல் மாதவரம் மண்டல அலுவலகம் முன் ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் சுப்பிரமணி, ரமேஷ் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர்.

இதில் 12 பெண்கள் உள்பட 42 பேர் கலந்து கொண்டனர். அவர்களை மாதவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் கைது செய்தனர். அனைவரும் மாதவரத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

சென்னை அம்பத்தூர் உழவர் சந்தை அருகில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் சார்பில் அரசு ஊழியர்கள், பள்ளி ஆசிரியர்கள் சுமார் 50–க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த அம்பத்தூர் போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து, அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

ஆவடி தாசில்தார் அலுவலகம் அருகே ஜாக்டோ–ஜியோ சார்பில் ஆசிரியர்கள் நேற்று காலை ஒருங்கிணைப்பாளர் குப்புராஜ் தலைமையில் ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சுமார் 100 ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்